ஆசிரியை விஜயபானு 
க்ரைம்

போலி சான்றிதழ்... 24 வருடமாக வேலை செய்த தேனி ஆசிரியை- அதிகாரிகள் அதிர்ச்சி!

காமதேனு

தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயபானு. இவர் ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனுார் அருகே உள்ள ராஜேந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1999ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அவர் பணியில் சேர்ந்து கடந்த 24 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இன்னும் சில ஆண்டுகளில் அவர் ஓய்வும் பெற உள்ளார். இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு போன்போட்டு, ஆசிரியை விஜயபானுவின் சான்றிதழ் போலி என்றும், அவர் மோசடி செய்து பணியில் சேர்ந்ததாகவும் கூறியிருக்கிறார்.

இதனால், ஷாக் ஆன அதிகாரிகள் ஆசிரியையின் சான்றிதழ்களை ஆய்வு செய்தனர். அதில் விஜயபானு கொடுத்த 12ம் வகுப்பு சான்றிதழ் போலியானது என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி அதிகாரி கலாவதி, ஆசிரியை விஜயபானு மீது புகார் அளித்தார். அதில், ஆசிரியை விஜயபானு போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளதாகவும், 24 ஆண்டுகளாக அவர் ஆசிரியையாக பணியாற்றி வருவதாகவும், உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் பேரில் போலி ஆசிரியை விஜயபானு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 12ம் வகுப்பு சான்றிதழை போலியாக கொடுத்து 24 ஆண்டுகள் அரசுப் பணியில் பணியாற்றி வந்த ஆசிரியையின் செயல் தேனி பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT