க்ரைம்

மசாஜ் சென்டருக்குச் சென்று வந்த முதியவரிடம் பணம் பறிப்பு: போலீஸ் போல நடித்து மோசடி!

காமதேனு

மசாஜ் சென்டருக்கு சென்று விட்டு வீடு திரும்பிய முதியவரிடம் போலீஸ் எனக்கூறி கூகுள்பே மூலம் 20 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர், முதல் தெருவை சேர்ந்தவர் நாகராஜ்( 65).

இவர் கடந்த 5-ம் அடையாறு கஸ்தூரிபாய் நகர் தனலட்சுமி அவின்யூவில் உள்ள மசாஜ் சென்டருக்கு சென்று கால்களுக்கு மசாஜ் செய்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அவர் கஸ்தூரிபாய் நகர், மூன்றாவது தெரு அருகே நடந்து வரும் போது இரண்டு பேர் நாகராஜை வழிமறித்து தாங்கள் போலீஸ் என்று மிரட்டும் தோனியில் பேசினர். பின்னர் நாகராஜிடம்

இந்தப்பக்கம் எங்கே சென்று வருகின்றீர்கள் என கேட்டனர். மசாஜ் சென்டருக்கு சென்று விட்டு வருவதாக நாகராஜ் தெரிவித்துள்ளார்.

உடனே அவர்கள் இருவரும் பொய் சொல்கிறீர்கள், பெண்களிடம் சென்று உல்லாசமாக இருந்து விட்டு வருகிறீர்கள் என்றும் இதனை உங்கள் குடும்பத்தாரிடம் சொல்லாமல் இருக்க எங்களுக்கு பணம் தரவேண்டும் என மிரட்டி உள்ளனர்.

நாகராஜ் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறியவுடன் அவரை மிரட்டி கூகுள் பே மூலம் 20,000 ரூபாயை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் உறவினர்களுடன் சென்று நாகராஜ் அடையார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பழைய குற்றவாளிகளான மெரினாவில் பலூன் வியாபாரம் செய்யும் நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த ஹசன் அலி(30), பஜ்ஜி வியாபாரம் செய்யும் ராஜீவ் காந்தி (40) ஆகியோர் நாகராஜிடம் போலீஸ் போல் நடித்து மிரட்டி பணம் பறித்து சென்றது தெரியவந்தது.

இன்று இருவரையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஹசன்அலி சில ஆண்டுகளுக்கு முன்பு எழும்பூரில் உள்ள மசாஜ் சென்டரில் வேலை செய்து வந்ததும், அங்கு வரும் முதியோர்களிடம் ஆசை வார்த்தை கூறி பெண்களை வைத்து ஏமாற்றி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் மசாஜ் சென்டர் வேலையை விட்டு விட்டு பெயரளவில் பலூன் கடை நடத்தி கொண்டு கூட்டாளி ராஜீவ்காந்தியுடன் சேர்ந்து கொண்டு பகல் நேரத்தில் மசாஜ் சென்டர்களை நோட்டமிட்டு அங்கிருந்து வரும் முதியவர்களை குறி வைத்து மிரட்டி பணம் பறித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் மசாஜ் சென்டருக்கு சென்று வருவது குடும்பத்தினருக்கு தெரிந்து விட்டால் அவமானம் என நினைத்து யாரும் புகார் கொடுக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில்

மசாஜ் சென்டருக்கு சென்று வரும் முதியவர்களை குறிவைத்து தொடர்ச்சியாக பணம் பறித்து வந்துள்ளார். அவர்களிடமிருந்து ரூ.17,000 போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீஸார் பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட ஹசன் அலி மீது ஏற்கனவே பாண்டி பஜார் காவல் நிலையத்தில் செல்போன் பறிப்பு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT