க்ரைம்

கர்நாடகா பள்ளிகளில் போதை மாத்திரை சப்ளை: தமிழக மாணவர்கள் சிக்கினர்!

காமதேனு

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி அருகே போதை மாத்திரை விற்பனை செய்த தமிழகத்தைச் சேர்ந்த 2 கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரி அருகில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அப்பகுதிகளில் கண்காணித்தனர். அப்போது ஹொசகெரேஹள்ளி பகுதியில் காரில் வந்த இருவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடமிருந்த 51 கிராம் போதை மாத்திரைகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த மனோரஞ்சித், கோயமுத்தூரைச் சேர்ந்த சுகேஸ் குமரன் என்பது தெரிய வந்தது. இவர்கள் பெங்களூரு ஜெயநகரில் உள்ள கல்லூரியில் படிப்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,” அண்டை மாநிலங்களில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து பெங்களூருவில் பள்ளி, கல்லூரி அருகில் மாணவர்களிடம் இவர்கள் இருவரும் விற்பனை செய்துள்ளனர்” என்றனர்.

SCROLL FOR NEXT