க்ரைம்

தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த கார்... பறிபோன அரசு அதிகாரியின் உயிர்: தப்பிய மனைவி, மகள்

காமதேனு

கன்னியாகுமரி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற சாலை விபத்தில் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், குருசடி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் லூர்து ராயப்பன்(51). இவருக்கு லீமா என்ற மனைவியும், ஜாய்ஸ் ஏஞ்சல்ஸ் என்ற மகளும் உள்ளனர். புதுக்கோட்டையில் குடும்பத்துடன் இவர்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் உறவினர் வீட்டு விசேசத்திற்காக லீமாவும், ஜாய்ஸ் ஏஞ்சல்ஸும் குமரி மாவட்டம் வந்திருந்தனர். அவர்களை மீண்டும் புதுக்கோட்டைக்கு அழைத்துச் செல்ல புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த விமல் என்பவரின் காரைப் பிடித்து லூர்து ராயப்பன் வந்தார்.

குமரிமாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் இருந்த தன் மனைவி, மகளை அழைத்துக்கொண்டு காரில் இன்று காலை புதுக்கோட்டைக்குச் சென்று கொண்டிருந்தார். திருநெல்வேலி, ரெட்டியார்பட்டி அருகில் கார் வந்தபோது எதிர்பாராத விதமாக தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அனைவரும் மீட்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி லூர்து ராயப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். சாலைவிபத்தில் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் உயிரிழந்தது அம்மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

SCROLL FOR NEXT