க்ரைம்

பரபரப்பான மார்க்கெட்டில் பயங்கர விபத்து...ஜீப் மோதி மாற்றுத்திறனாளி பலி!

காமதேனு

கோவாவில் பரபரப்பான மார்க்கெட் பகுதியில் ஜீப் மோதி மாற்றுத்திறனாளி சம்பவ இடத்திலேயே இன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பனாஜி

கோவாவில் உள்ள பனாஜியில் இன்று காலை இந்த சம்பவம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளி ஒருவர், அவரது சிறப்பு ஸ்கூட்டரில் மார்க்கெட் வந்து கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த ஜீப் அந்த வாகனத்தில் மோதியது. இதில், அந்த வாகனம் தூக்கி வீசப்பட்டது. இதனால் அதில் இருந்த மாற்றுத்திறனாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அந்த ஜீப்பில் இருந்தவரை பிடித்து விசாரித்தனர். அப்போது ஜீப்பை தான் ஓட்டுவில்லை என்று அவர் கூறினார். தனது நண்பர் தான் அந்த ஜீப்பை ஓட்டி வந்ததாகவும், அவர் தப்பியோடி விட்டதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து அவரைப் பிடித்து அப்பகுதி மக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் மாற்றுத்திறனாளியை மோதிய ஜீப், மின்கம்பத்தில் மோதி நின்றது தெரிய வந்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்திற்குள்ளானதாக கூறிய போலீஸார், வாடகைக்கு எடுத்து வந்த சுற்றுலா வாகனம் அது என்றும் கூறினர்.

உடல்

இந்த விபத்து குறித்து நடத்தி வரும் போலீஸார், பிடிபட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இறந்த மாற்றுத்திறனாளி யார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறிய போலீஸார். இறந்தவரின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து கிடைத்த வீடியோவைக் கொண்டு போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், விபத்து ஏற்படுத்திய ஜீப்பின் ஓட்டுநரிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்வது பதிவாகியிருந்தது. அவர்களுடன் ஓரு காவல் துறை அதிகாரியும் இருந்துள்ளார்.

GA03Z6188 என்ற பதிவெண் கொண்ட ஜீப்பை குற்றம் நடந்த இடத்தில் இருந்து போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து வாகனத்தின் உரிமையாளரைக் கொண்டு விபத்து நடத்தியவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஜீப் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT