க்ரைம்

ஆக்கிரமிப்பாளருடன் கூட்டு சேர்ந்த இன்ஸ்பெக்டர்: டிஐஜியிடம் மூதாட்டி பரபரப்பு புகார்

காமதேனு

தனது வீட்டை ஆக்கிரமிப்பு செய்யும் நபருக்குத் துணைபோகும் காவல்துறை ஆய்வாளர், தன் மகள்களையும் அவதூறாக பேசியதாக மூதாட்டி ஒருவர் திருநெல்வேலி சரக டிஜஜியின் முகாம் இல்லத்திற்கு மனு கொடுக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி அருகில் உள்ள முனைஞ்சிபட்டி, வடக்கு இளங்குளத்தைச் சேர்ந்தவர் மரியபாப்பு(65). கணவர் இறந்த நிலையில் மரியபாப்பு, தன் சேதமான பழைய வீட்டை இடித்துவிட்டு பிரதரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் மானியம்பெற்று புதிய வீடு கட்டிவருகிறார். இவர் இன்று தன் மகள்களுடன் நெல்லை சரக டிஜஜியின் முகாம் இல்லத்திற்கு வந்து புகார் மனுக் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "என் வீட்டுக்குப் பின் குடியிருக்கும் அருள் என்பவர், விஜயநாராயணம் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றும் அசோகன் ஆதரவோடு தடுப்புச்சுவர் கட்டி என் வீட்டு கட்டுமானத்தைத் தடுக்கிறார்.

இதைப்பற்றி விஜயநாராயணபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றேன். அங்கு என் மகள்களை ஆய்வாளர் அசோகன் அவதூறாகப் பேசுகிறார். என் நிலத்தை ஆண்வாரிசு இல்லாததால் தனக்கு விற்கும்படி அருள் கட்டாயப்படுத்தி வந்தார். அது நடக்காததால் அசோகனைக் கூட்டு சேர்த்துக்கொண்டு மிரட்டுகிறார். ஆய்வாளர் அசோகனே எங்கள் வீட்டுக் கட்டுமானப் பணியை நிறுத்தும்வகையில் எங்கள் வீட்டைச் சுற்றி தடுப்புச்சுவர் அமைக்க துணை செய்தார்.

எனவே அருள், ஆய்வாளர் அசோகன் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் கொடுத்துள்ளேன் ” என்றார். காவல்துறை ஆய்வாளருக்கு எதிராக ஒருகுடும்பமே திரண்டு டிஜஜியிடம் புகார் கொடுக்க வந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT