டெல்லி பாதுகாப்பு பணியில் போலீஸார் 
க்ரைம்

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி... டெல்லியில் பலத்த பாதுகாப்பு

காமதேனு

கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் நேற்று நேரிட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, தேசத்தின் தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெங்களூரு உணவகத்தில் நேற்று மதியம் நேரிட்ட வெடி விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து டெல்லி காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையின் பல்வேறு பிரிவுகள் தலைநகரின் பல்வேறு பகுதிகளில் தங்கள் கண்காணிப்பினை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்காக அதிக எண்ணிக்கையிலான போலீஸார் தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். முக்கிய இடங்களில் ரோந்து பணியை அதிகரிக்குமாறும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவம்

மக்கள் அதிகளவில் கூடும் சரோஜினி நகர், லஜ்பத் நகர், ஹவுஸ் காஸ் மற்றும் பஹர்கஞ்ச் போன்ற இடங்களில் காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதி நிர்வாகத்தினர், பாதுகாவலர்களை நியமித்திருப்போர் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான செயல் அல்லது நபர்கள் குறித்த தகவல்களை உடனடியாக போலீஸாருக்கு தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நிர்வாக அமைப்புகள் தங்கள் வளாகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசத்தின் தலைநகர் பாதுகாப்பை உறுதிப்படுத்த பயங்கரவாத எதிர்ப்பு பிரிவுகள், உளவுத்துறை நிறுவனங்கள் நெருக்கமாக பணியாற்றவும், உளவுத் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் தொடங்கியிருக்கின்றன. பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அவர்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸாரின் சோதனை மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே தேசியத்தின் தலைநகருக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் டெல்லி காவல்துறை மிகவும் எச்சரிக்கையாக உள்ளது.

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு சம்பவத்தின் சந்தேக நபர்

பெங்களூரு ராமேஸ்வரம் ஓட்டலில் நடந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து 'சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் வெடிபொருள் பொருள்கள் சட்டத்தின் கீழ் பெங்களூரு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தின் தீவிரவாதப் பின்னணி குறித்து ஆராய தேசிய பாதுகாப்பு முகமையான என்ஐஏ களமிறங்கி உள்ளது. மாநிலத்தில் பாஜக ஆட்சிக்காலத்தில் மங்களூருவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும், தற்போதைய பெங்களூரு சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெளிவுபடுத்தி உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இப்படியெல்லாம் வாக்கு சேகரிக்கக்கூடாது... அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

பெங்களூரு ஓட்டலில் டைமர் வெடிகுண்டு வெடிப்பில் தீவிரவாத சதியா?... என்ஐஏ தீவிர விசாரணை!

கோடிக் கணக்கான இளைஞர்களுக்கு அநீதி இழைக்காதீர்கள்... சு.வெங்கடேசன் எம்.பி கொந்தளிப்பு!

4+1 வேண்டும்... பிரேமலதா பிடிவாதம்: அதிமுக- தேமுதிக கூட்டணி நிலவரம்!

சரசரவென குறைந்த பூண்டு விலை...இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

SCROLL FOR NEXT