க்ரைம்

கூலிப்படையை ஏவி தந்தையைக் கொன்ற மகள்: தென்காசியில் பயங்கரம்

காமதேனு

சொத்துக்காக தனது தந்தையை கூலிப்படையை ஏவி கொலை செய்த மகள், மருமகன் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், இலஞ்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோட்டைமாடன்(82). இவர் மே 4-ம் தேதி இலஞ்சி செங்கோட்டை செல்லும் சாலையில் உள்ள தோப்பில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து அவரது இரண்டாவது மகள் சந்திரா அளித்த புகாரின் பேரில், குற்றாலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது இக்கொலையை செய்தது கோட்டை மாடனின் மூன்றாவது மகள் ஸ்ரீதேவி(40), மூத்த மகளின் கணவரான பரமசிவன் (57), கல்லிடைக்குறிச்சி வசந்தகுமார்(37), இலஞ்சியைச் சேர்ந்த மகேஷ் (24) என்பது தெரிய வந்தது. அவர்களைக் கைது செய்த போலீஸார், தப்பியோடிய சேகர் என்பவரைத் தேடி வருகின்றனர்.

ஏன் இந்தக் கொலை நடந்தது என போலீஸார் கூறுகையில், “கோட்டைமாடனுக்கு மூன்று மகள்கள். ஆனாலும், அவர் தனது இரண்டாவது மகள் சந்திராவுடன் வசித்து வந்தார். அத்துடன் தனக்குச் சொந்தமான 1.82 ஏக்கர் தோப்பை மூன்றில் இரண்டு பகுதியை சந்திராவின் மகன் விஜயகுமார் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். இதற்கு ஸ்ரீதேவி மற்றும் மூத்த மகளின் கணவர் பரமசிவம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதனால் மூன்றாவது மகள் ஸ்ரீதேவி மற்றும் மூத்த மகளின் கணவர் பரமசிவன் ஆகியோர், கோட்டைமாடனைக் கொலை செய்ய திட்டமிட்டனர்.
இதற்காக பரமசிவன் வீட்டில் வேலை செய்த லோடு ஆட்டோ ஓட்டுநர் சேகர் என்பவரைத் தொடர்பு கொண்டு கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடலாம் என திட்டமிட்டனர். இதற்காக கல்லிடைகுறிச்சி பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார், இலஞ்சியைச் சேர்ந்த மகேஷ் ஆகியோரிடம் ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி முன்பணம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் வசந்தகுமார், மகேஷ் ஆகியோர் கோட்டைமாடனிடம் தோப்பில் உள்ள மரங்களை விலைக்கு வாங்குவதாக போல பேரம் பேசி நடித்தனர். இந்த நம்பி தோப்பிற்கு வந்த கோட்டைமாடனை அவர்கள் கம்பால் அடித்து கொலை செய்து தப்பி ஓடிவிட்டனர். கொல்லப்பட்டவரின் மூன்றாவது மகள் ஸ்ரீதேவியை பிடித்து விசாரணை செய்ததில் கூலிப்படையை ஏவி தனது தந்தையை கொலை செய்ய திட்டமிட்டதை ஒப்புக்கொண்டார். கொலையாளிகள் மீதி பணத்தைப் பெறுவதற்கு இலஞ்சிக்கு வந்த போது அவர்களைக் கைது செய்தோம்” என்றனர். சொத்துக்காக தந்தையை மகளே கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT