வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட நாட்டுத்துப்பாக்கி, வேட்டையாடப்பட்ட பறவைகள் பறிமுதல் 
க்ரைம்

தேர்தல் பறக்கும் படை சோதனையில் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்... கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி!

காமதேனு

கள்ளக்குறிச்சி அருகே தேர்தல் பறக்கும் படையினரின் நடத்திய வாகன சோதனையின் போது நாட்டுத் துப்பாக்கி மற்றும் வேட்டையாடப்பட்ட பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் தீவிர கண்காணிப்பில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. நிலையான கண்காணிப்பு குழுக்கள், தேர்தல் பறக்கும் படைகள் ஆகியவை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்கள், பணம் ஆகியவற்றை விநியோகிப்பதை தடுக்கும் வகையில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் பறிமுதல்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், துப்பாக்கிகள் வைத்திருப்போர் உடனடியாக அவற்றை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைத்து விட வேண்டுமென தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனிடையே கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ரிஷிவந்தியம் சட்டப்பேரவை தொகுதியில், பகண்டை கூட்டுச்சாலை அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரியுமான கொளஞ்சிவேல் தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது.

தேர்தல் பறக்கும் படையினர்

அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருப்பதை கண்டு கையில் வைத்திருந்த பையை சாலையோரமாக வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். உடனடியாக தேர்தல் பறக்கும் படையினர் அந்த பையை கைப்பற்றி சோதனை இட்டபோது, அதில் வேட்டையாடப்பட்ட நான்கு பறவைகள் மற்றும் ஒரு நாட்டுத் துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் வேட்டையாடிய பறவைகளை வாணாபுரம் வனக்காப்பாளர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

வாணாபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்
SCROLL FOR NEXT