கல்லூரி பேருந்து
கல்லூரி பேருந்து 
க்ரைம்

நடுரோட்டில் பற்றி எரிந்த கல்லூரி பேருந்து: ஓட்டுநரின் செயலால் உயிர் தப்பிய சென்னை மாணவர்கள்

காமதேனு

மாணவர்களை ஏற்றிச் சென்ற கல்லூரி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து முழுவதுமாக தீக்கிரையாகி உள்ளது. இதில் பயணம் செய்த 35 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார்கள்.

கல்லூரி பேருந்து, தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து நேற்று மாலை தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் எண்ணூரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதில் 35 கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். மாங்காடு, பரணிபுத்தூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது தீயில் கருகிய வாசனை வந்துள்ளது. மேலும் பேருந்தின் முன்பக்கம் லேசான புகையும் வெளியேறிக் கொண்டிருந்தது.

இதையடுத்து ஓட்டுநர் எபினேஷ் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தினார். அடுத்த சில நொடிகளிலேயே பேருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைக் கண்ட மாணவர்கள் அலறினார்கள். பிறகு அவசர அவசரமாக மாணவர்கள் பேருந்திலிருந்து இறங்கினார்கள். அடுத்த சில நிமிடங்களுக்குள்ளாகவே பேருந்து முழுவதும் தீ பரவத் தொடங்கியது. உடனடியாக மாணவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த மதுரவாயல் தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடு போல் ஆனது. பேருந்து ஓட்டுநர் உரிய நேரத்தில் பேருந்தை நிறுத்தி மாணவர்களைக் கீழிறங்கச் செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்குள்ளான பேருந்து கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ அலுவலகத்தால் புதுப்பிக்கப்பட்ட சான்று பெற்றுள்ளதாக சொல்கிறார்கள்.

SCROLL FOR NEXT