பெட்டியில் ஏற்பட்ட புகையால் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள். 
க்ரைம்

மின்சார ரயிலில் திடீரென கிளம்பிய புகை... நடைமேடைக்கு அலறியடித்து ஓடிய பயணிகள்!

காமதேனு

வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரயிலின் எஞ்சின் அருகே உள்ள பெட்டியில் புகை வந்ததை அடுத்து, திருவள்ளூர் அருகே ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பின்னர் குறைந்த வேகத்தில் சென்னை நோக்கி இயக்கப்பட்டது.

வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில் இன்று காலை 6 மணி அளவில் வேலூரிலிருந்து புறப்பட்டது. சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த இந்த ரயில், திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் செஞ்சிபனப்பாக்கம் இடையே காலை 8:40 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலின் எஞ்சின் பகுதியில் இருந்து புகை வருவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

ரயிலில் இருந்து வந்த புகை

இதையடுத்து ரயிலை நிறுத்திய லோகோ பைலட், ரயிலில் இருந்து இறங்கி வந்து புகை ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும், அதிர்ச்சியடைந்த பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து இறங்கி நடைமேடைக்கு அலறி அடித்து ஓடினர். தகவல் அறிந்து அங்கு வந்த ரயில்வே பணியாளர்கள் புகை வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள்

அப்போது ரயிலின் சக்கரப் பகுதியில் இருந்து புகை வந்தது கண்டறியப்பட்டது. அதிவேகத்தில் வந்த ரயில் திடீரென பிரேக் பிடிக்கும்போது சக்கரம் இயங்காமல் நின்று அப்பகுதியில் புகை கிளம்பியதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து குறைந்த வேகத்தில் ரயில் சென்னை கடற்கரை நோக்கி இயக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த ரயிலில் பயணித்த பயணிகள் மீண்டும் ரயிலில் ஏறி சென்னை கடற்கரை ரயில்நிலையம் நோக்கி பயணித்தனர்

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கடற்கரை பணிமனையில் வைத்து இந்த ரயில் பழுது நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT