பிரதமர் மோடி உடன் பிரபுல் படேல்
பிரதமர் மோடி உடன் பிரபுல் படேல் 
க்ரைம்

பாஜகவின் மற்றுமொரு ‘வாஷிங் மெஷின்’ ஜாலம்... பிரபுல் படேல் மீதான ஊழல் வழக்கை முடித்து வைத்தது சிபிஐ

காமதேனு

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல் மீதான ஊழல் வழக்கை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் இணைந்த சில மாதங்களில் சிபிஐ முடித்து வைத்துள்ளது.

பாஜக அல்லது அதன் தலைமையிலான கூட்டணியில் இணையும் மாற்றுக்கட்சியினர் மீதான ஊழல் வழக்குகள் திடீரென மாயமாவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனை பாஜக ஒரு வாஷிங் மெஷிங் சாதனம் என்றும், அதில் சேரும் ஊழல் பேர்வழிகளின் களங்கம் அனைத்தும் கழுவிக் களையப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் கேலி செய்கின்றன. இந்த வகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரபுல் படேல் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ தற்போது முடித்து வைத்துள்ளது. இது குறித்தான மனுவை விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

பிரபுல் படேல் - அஜித் பவார்

மகாராஷ்டிரா மாநில அரசியல் களேபரங்களில் ஒன்றாக பிரபுல் படேல் தானிருந்த சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை, அஜித் பவார் உடன் இணைந்து செங்குத்து வாக்கில் பிளந்துகொண்டு பாஜக கூட்டணியில் இணைந்தார். இதன் மூலம் உத்தவ் தாக்கரே தலைமையிலான தேசிவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் அடங்கிய கூட்டணி அரசுக்கு மாற்றாக, பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அடங்கிய கூட்டணி மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை பிளக்க, மத்திய விசாரணை அமைப்புகளின் வழக்குகளை முன்வைத்து பிரபுல் படேல் மற்றும் அஜித் பவார் ஆகியோர் மிரட்டப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அவற்றை பிரபுல் படேல் உள்ளிட்டோர் மறுத்தனர். எனினும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த சில மாதங்களில் பிரபுல் படேல் மீதான சிபிஐ வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் வழக்கு தேசத்தின் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ840 கோடி இழப்பை ஏற்படுத்தியது தொடர்பானது.

ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் இணைந்து உருவாக்கப்பட்ட நேஷனல் ஏவியேஷன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு, விமானங்களை குத்தகைக்கு எடுத்ததில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 2017-ல் சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி காலத்தில், 2006-ல் தனியார் விமான நிறுவனங்களின் விலையுயர்ந்த 15 விமானங்கள் முறைகேடாக குத்தகைக்கு எடுக்கப்பட்டன.

பிரபுல் படேல்

அதற்கடுத்த ஆண்டே அரசு விமான நிறுவனத்துக்கு போயிங் விமானங்கள் வாங்கப்பட இருந்த சூழலில், அரசு நிறுவனத்துக்கும் அரசின் கருவூலத்துக்கும் கோடிக்கணக்கில் இழப்பு நிகழும் வகையில் இந்த குத்தகை எடுக்கப்பட்டது. இதனால் தனியார் நிறுவனங்கள் வருமானம் கொழித்தன. அரசு கடும் நட்டமடைந்தது. இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட நபர்கள் நேர்மையற்றவர்களாகவும், அறியப்படாத தரப்பினருடன் சதி செய்வதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியது. தவறான முடிவு காரணமாக அரசு புதிதாக வாங்கிய பத்துக்கும் மேற்பட்ட போயிங் 777 மற்றும் 737 ஆகிய சொந்த விமானங்கள் வெறுமனே காட்சிப்பொருளாக நின்றன. 2007-09 காலகட்டத்தில் ரூ.840 கோடிக்கு நஷ்டம் ஏற்படுத்திய இந்த முறைகேடு வழக்கில் பிரபுல் படேல் சிக்கினார்.

ஆனால் தற்போது அவருக்கு எதிரான வழக்கை சிபிஐ முடித்து வைத்துள்ளது. எனினும் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி பிரசாந்த் குமார், சிபிஐ முடிவு தொடர்பான தனது தீர்ப்பினை ஏப்ரல் 15 அன்று அறிவிக்க இருக்கிறார். அப்போது அவர் சிபிஐ முடிவை ஏற்றுக்கொண்டு பிரபுல் படேலை வழக்கிலிருந்து விடுவிக்கலாம் அல்லது புதிய ஐயங்களை எழுப்பி சிபிஐ தொடர் விசாரணைக்கு உத்தரவிடவும் செய்யலாம்.

இதையும் வாசிக்கலாமே...    

வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!

அடுத்த தோனி இவர் தான்... தோனியே புகழ்ந்த அந்த நபர் இவரா?

SCROLL FOR NEXT