க்ரைம்

திசைத் திருப்பிய செல்போன்... தொழிலதிபர் கழுத்தறுத்துக் கொலை... இரவில் நடந்த பயங்கரம்

காமதேனு

இரவில் வீட்டில் புகுந்து தொழிலதிபரை கழுத்தை அறுத்து கொலை செய்த கும்பல், 100 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த கொடூர சம்பவம் அறந்தாங்கியில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்த தம்பதி முகமது நிஜாம்- ஆயிஷா பேபி. ஆப்டிகல்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிஜாமுக்கு 3 குழந்தைகள் உள்ளன. மகள் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். மகன்கள் இருவரும் வெளியூரில் உள்ள ஆப்டிகல்ஸ் கடையை நடத்தி வருகின்றனர். நிஜாம் தனது மனைவி ஆயிஷாவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார் நிஜாம். அப்போது, திடீரென 3 மர்மநபர்கள் வீட்டில் குதித்துள்ளனர். இதனை கவனிக்காத நிஜாம், தனது செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கும்பல், நிஜாமின் கழுத்தை அறுத்துள்ளனர். இதில் நிஜாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, வீட்டிற்குள் புகுந்த கும்பல், ஆயிஷா பேபியை கத்தியை காட்டி மிரட்டி பீரோ சாவியை பறித்ததோடு, அவரை கட்டிப்போட்டுவிட்டு 100 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாவட்ட எஸ்.பி.யும் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு இந்த கொலை நடந்ததா அல்லது வேறு எதாவது காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதோடு, கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். நகைக்காக தொழிலதிபர் கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அறங்தாங்கியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT