க்ரைம்

பாலியல் வழக்கில் நர்சிங் கல்லூரி தாளாளருக்கு ஜாமீன் ரத்து

கி.மகாராஜன்

பாலியல் வழக்கில் திண்டுக்கல் தனியார் நர்சிங் கல்லூரி தாளாளருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.

திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன். இவர் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சில மாணவிகள் போலீஸில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் போக்சோ உட்பட 14 பிரிவுகளில் ஜோதிமுருகன் மீது தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து ஜோதிமுருகன் தலைமறைவானதால் அவரை கைது செய்யக்கோரி திண்டுக்கல்லில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னர், திருவண்ணாமலை போளூர் நீதிமன்றத்தில் ஜோதிமுருகன் சரணடைந்தார். அவர் பழனி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஒரு வாரத்தில் ஜோதிமுருகனுக்கு கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஜாமீனை ரத்து செய்யக்கோரி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. இதையடுத்து ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸ் தரப்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜோதிமுருகனுக்கு திண்டுக்கல் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்த நீதிபதி, 3 நாளில் சரணடைய வேண்டும். தவறினால் போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT