ஏற்காடு சாலையில் விபத்து
ஏற்காடு சாலையில் விபத்து  
க்ரைம்

விபத்து எதிரொலி... ஏற்காடு செல்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

காமதேனு

ஏற்காடு - சேலம் சாலையில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.

ஏற்காட்டில் இருந்து சேலத்திற்கு தனியார் பேருந்து நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. 13ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, பிரேக் பிடிக்காததால், பக்கவாட்டு தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதில், 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மீதமுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏற்காடு செல்லும் வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்காடு - சேலம் சாலையில் விபத்து

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கூறுகையில், "கோடை காலம் என்பதால் ஏற்காட்டிற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அதைக் கருத்தில் கொண்டு அனுபவம் உடைய ஓட்டுநர்கள் மட்டுமே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவர். இதற்கென ஏற்காடு அடிவார சோதனைச் சாவடியிலேயே காவல்துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் மூலம் ஆய்வு செய்த பின்னர் மட்டுமே வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆட்சியர் பிருந்தா தேவி

மேலும், மலைப்பகுதிகளில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்பட்ட 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் மற்றும் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளைத் தீவிரமாகக் கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT