க்ரைம்

`உதவி கேட்பாங்க, ஏமாந்து போகாதீங்க'- மோசடி கும்பலால் அலர்ட்டான நடிகை ஷாலு ஷம்மு

காமதேனு

இந்தியாவில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப சைபர் குற்றங்களையும் மோசடி கும்பல் நவீன முறையில் அரங்கேற்றி வருகின்றன. அந்த அடிப்படையில் போலி இணையதள பக்கங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல், படிப்படியாக தங்கள் மோசடிகளை நவீனப்படுத்தி மக்களை ஏமாற்றி வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக போலியாக ஃபேஸ்புக் கணக்குகளை உருவாக்கி பணம் பறிக்கும் கும்பல் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

தற்போது சமூக வலைதளப் பக்கங்களை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் வசதிகளும் உருவாக்கப்பட்டதையடுத்து, அதிக பாலோயர்களை கொண்ட பிரபலங்களை குறிவைத்து மிரட்டி பணம் பறிக்கப்படுவதோடு, பல்வேறு வழிகளில் சமூக வலைதளப் பக்கங்களை முடக்கி மோசடி செய்யும் கும்பல் செயல்பட்டு வருகிறது. இதனிடையே, நடிகை ஷாலு ஷம்முவின் சமூக வலைத்தள பக்கத்தை முடக்க மோசடி கும்பல் முயற்சி செய்துள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இருட்டு அறையில் முரட்டு குத்து, இரண்டாம் பாகம், உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் போட்டோக்கள், வீடியோக்களை வெளியிட்டு 6.5 லட்சம் பாலோயர்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்க முயல்வதாக எச்சரிக்கை பதிவை வெளியிட்டு உள்ளார். அதில், தன்னிடம் மேக்கப் கலைஞராக பணிபுரிந்த உமா என்கிற நபர் இன்ஸ்டாகிராம் மெசஞ்சர் மூலம் தொடர்பு கொண்டதாகவும், தனது ஃபேஸ்புக் கணக்கை புதிய மொபைலில் ஓபன் செய்ய முடியாத காரணத்தினால், இ-மெயில் அக்கவுண்டை இன்ஸ்டாகிராமில் இணைத்துக் கொள்ளுமாறு உதவி கேட்டதாக ஷாலு ஷம்மு தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணம் ஃபேஸ்புக் அக்கவுண்டை புதிதாக மொபைலில் ஓபன் செய்வதற்கு பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய கட்டுப்பாடுகளை ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் ஃபேஸ்புக் கணக்கை ஓபன் செய்யும் நபரின் மெயில் அக்கவுண்டிற்கு code ஒன்று அனுப்பப்படும். அதை பயன்படுத்தினால் மட்டுமே ஃபேஸ்புக் கணக்கை ஓபன் செய்ய முடியும். அந்த அடிப்படையில் தனது மெயில் அக்கவுண்டை இணைத்துக் கொள்ளுமாறு உமா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெயில் கணக்கை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவ்வாறு மெயிலை இணைத்துக்கொண்டு மொபைலுக்கு வரும் code யை அனுப்புமாறு கேட்டதாக ஷாலு ஷம்மு குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், உறவினர்கள் மூலம் இந்த நடைமுறையை பயன்படுத்தி ஃபேஸ்புக் கணக்கை ஓபன் செய்து கொள்ளலாமே என உமாவிடம் கேட்டதாக தெரிவித்த நடிகை, அதன் பிறகு விசாரணை செய்தபோது தனது மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருந்த உமா இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை மோசடிக் கும்பல் ஹேக் செய்தது தெரியவந்தது என்றும் இவ்வாறு நண்பர்களோ தெரியாதவர்களோ, ஃபேஸ்புக் கணக்கை ஓபன் செய்ய உதவுமாறு கூறி தங்கள் மெயில் கணக்கை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைத்துக்கொள்ள கேட்பவர்களை நம்ப வேண்டாம் எனவும் நடிகை கேட்டுக்கொண்டுள்ளார்

மேலும் இவ்வாறு மோசடிக் கும்பலை நம்பி மெயில் கணக்கை இன்ஸ்டாகிராமில் இணைத்துக் கொண்டால் உங்களது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ஹேக் செய்து கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதுடன் உங்கள் போட்டோக்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை அபகரித்தும், சமூக வலைதள கணக்கை தவறாக பயன்படுத்தி மிரட்ட வாய்ப்பு இருப்பதாகவும், இதுபோன்று மெயில் கணக்கை இணைத்துக் கொண்டு பலரும் தங்களது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை இழந்து பாதிப்புக்கு உள்ளானதாகவும் நடிகை ஷாலு ஷம்மு எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT