துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடம்
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடம் 
க்ரைம்

மாஸ்கோவில் பயங்கரம்... மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் பலி: நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்!

காமதேனு

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

சம்பவ இடத்தில் போலீஸார்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள குரோகஸ் சிட்டி ஹாலில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பிக்னிக் என்ற ராக் இசைக் குழுவினர் இசை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தனர். அதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்ச்சி வெகு உற்சாகத்துடன் நடந்து கொண்டிருந்தது.

அப்போது  அந்த அரங்கத்துக்குள் நுழைந்த சிலர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் மக்கள் கொத்து கொத்தாக செத்து விழுந்தனர். இந்த ஆயுதக் குழுவினரிடம் இருந்து உயிர்த்தப்ப மக்கள் அலறி அடித்துக்கொண்டு கொண்டு வெளியே ஓடினர்.  அப்படி ஓடியவர்கள் மீது கையெறி குண்டுகளை வீசியும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இசை நிகழ்ச்சி நடந்த அரங்கு

மேலும் அவர்கள் அந்த இடத்தினை தீயிட்டு கொளுத்தியதாகவும்,  வெடிமருந்துகளை வீசியும் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீஸார் மற்றும் மீட்புப் படையினர் அங்கிருந்து இதுவரை 60 உடல்களை மீட்டுள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர்களை படுகாயத்துடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சம்பவ இடத்தில் இருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருவதாகவும், அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.  அந்த நாட்டில் அண்மைக் காலங்களில் நடத்தப்பட்ட மிகப் பயங்கரமான தாக்குதல் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SCROLL FOR NEXT