க்ரைம்

கொலை வழக்கில் 6 ஊழியர்கள் கைது... போதை மறுவாழ்வு மைய ஓனர், மனைவிக்கு வலை

ரஜினி

சென்னை போதை மறுவாழ்வு மையத்தில் தனது கணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக மனைவி அளித்த புகாரின் பேரில் 6 ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவான மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டை பெரியார் திடல் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜி (45). ஆட்டோ ரீப்பர் அடிக்கும் வேலை பார்த்து வந்த ராஜி போதைக்கு அடிமையானதால் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி கலாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ராஜியை அவரது மனைவி ராயப்பேட்டை வெஸ்கோஷ் சாலையில் அமைந்துள்ள மெட்ராஸ் கேர் சென்டர் என்ற பெயரில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ராஜி மீண்டும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து கலா மீண்டும் நேற்று கணவர் ராஜியை மீண்டும் ராயப்பேட்டை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு திடீரென கலாவை தொடர்பு கொண்ட போதை மறுவாழ்வு ஊழியர்கள், உங்கள் கணவர் ராஜி கீழே விழுந்து இறந்து விட்டதாக தெரிவித்ததாகவும், உடனே ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்த கணவரை பார்த்த போது உடல் முழுவதும் ரத்த காயங்கள் இருந்ததாகவும் கலா கூறியிருந்தார்.

இதனையடுத்து தனது கணவர் ராஜியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை அடித்து கொலை செய்த போதை மறுவாழ்வு மையத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் ஊழியர்கள் சதீஷ், பார்த்தசாரதி, யுவராஜ், சரவணன் ஆகியோர் தனது கணவரை கட்டையால் கடுமையாக தாக்கி, வெந்நீர் ஊற்றி கொடுமைபடுத்தியதால் இறந்து விட்டதாக குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து கலா அளித்த புகாரின் பேரில் அண்ணாசாலை போலீஸார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து போதை மறுவாழ்வு மையத்தின் ஊழியர்கள் சரவணன், யுவராஜ், செல்வமணி, கேசவன், மேலாளர் மோகன் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு துணை ஆணையர் பகலவன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீஸார், மெட்ராஸ் கேர் சென்டர் ஊழியர்கள் யுவராஜ், கேசவன், செல்வமணி, சரவணன், சதீஷ், மோகன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் கார்த்திகேயன், அவரது மனைவி லோகேஸ்வரியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 12 நோயாளிகளை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்திற்கு மாற்றம் செய்த போலீஸார் போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT