வீட்டில் வெடித்த ஏசி மெஷின்... 8 மாத குழந்தை உட்பட, ஆழ்ந்த உறக்கத்தில் அநியாயமாய் பலியான 4 உயிர்கள்

By காமதேனு

இன்று அதிகாலை ஏசி சாதனம் வெடித்ததில் உறங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தின் 4 பேர் மூச்சுத் திணறி பலியானார்கள்.

குஜ்ராத் மாநிலம் துவாரகா நகரில் இந்த துயர சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. ஆதித்யா சாலையில் அமைந்திருக்கும் ஒரு வீட்டில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டனர். அதிகாலையில் வீட்டில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, திடீரென ஏசி சாதனம் வெடித்தது. இதனால் எழுந்த புகை மண்டலத்தில் மூச்சுத் திணறி 4 உயிர்கள் பரிதாபமாக பலியாகி இருக்கின்றன.

தீ விபத்து

காவல்துறை விசாரணையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தில் 8 மாத குழந்தை மற்றும் ஒரு மூதாட்டி உட்பட 4 பேர் பலியாகி உள்ளனர். 39 வயதாகும் பவன் உபத்யாய் அவரது 29 வயது மனைவி திதி, அவர்களின் 8 மாத மகள் தயானா மற்றும் பவனின் 69 வயது தாயார் பவானி பென் ஆகியோர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகாலை 3 மணியளவில் வெடித்த ஏசி காரணமாக தீப்பற்றியதும், அதன் புகையில் சிக்கி, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் மயங்கியதும், 4 உயிர்களின் பலிக்கு காரணம் என முதல்கட்டத் தகவல் தெரிவிக்கிறது. வீட்டிலிருந்து புகை எழும்பியதை சாலை சென்ற சிலர் கவனித்து தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தந்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததில், வீட்டின் மேல் தளத்தின் படுக்கையறையில் 4 சடலங்களை கண்டெடுத்தனர்.

பவன் - திதி தம்பதி

அதே வீட்டின் தரை தளத்தில் உறங்கிய பவனின் 90 வயது பாட்டி அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் பிழைத்திருக்கிறார். வயோதிகம் காரணமாக அவரால் படியேற முடியாது என்பதால், தரை தளத்திலேயே அந்த மூதாட்டி உறங்குவது வழக்கம். இதனால் மாடியில் நிகழ்ந்த ஏசி வெடிப்பு மற்றும் புகைமண்டலத்தால் எழுந்த உயிர்பலி அசம்பாவிதத்திலிருந்து அவர் தப்பியிருக்கிறார். எனினும் பச்சிளம் குழந்தை உட்பட குடும்பத்தினர் அனைவரும் பலியான அதிர்ச்சியில், அவர் மருத்துவமனையில் கவலைக்கிடமான சூழலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

VIEW COMMENTS