க்ரைம்

முன் விரோதம், குடும்பம், சொத்து தகராறு: சென்னையில் 25 நாளில் 20 பேர் படுகொலை

ரஜினி

சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து இன்று வரை 25 நாட்களில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மே 1-ம் தேதி நள்ளிரவு சென்னை திருவான்மியூர் குப்பம் வேம்புலி அம்மன் கோயில் தெருவில் நடந்த துக்கநிகழ்ச்சியில் ஒன்றாக மது அருந்திய இளைஞர் சதீஷ்குமார், அருண் ஆகியோர் தினேஷ் என்பவரால் கொலை செய்யப்பட்டனர். போதையில் செல்போன் காணாமல் போனதால் கொலை நடந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மே 2-ம் தேதி அம்பத்தூரில் கருத்து வேறுபாடு காரணமாக நடந்த மோதலில் ஹரிஷ் பிரம்மா என்பவர் அவரது மனைவி ரஷீயா கத்துனாவை அடித்து கொலை செய்தார். கணவரை காவல் துறையினர் கைது செய்தனர். அதே 2-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் மெட்ராஸ் கேர்ஸ் சென்டர் என்ற பெயரில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சென்ற ராஜி என்பவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் மற்றும் ஊழியர்கள் ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். உரிமையாளரின் மனைவி லோகேஸ்வரி இன்னும் தலைமறைவாக உள்ளார்.

மே 5-ம் தேதி அரும்பாக்கம் பகுதியில் மனைவி ஆனந்தி ஈஸ்வரியை மதுபோதையில் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் அவரது கணவர் ஜோசப்பை காவல் துறையினர் கைது செய்தனர். மே 6-ம் தேதி சென்னை குன்றத்தூரில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் தியாகராஜன் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதில் கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

மே 7-ம் தேதி மயிலாப்பூரில் ஆடிட்டர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதாவை கார் ஓட்டுநரான நேபாளத்தைச் சேர்ந்த பதம்லால் கிருஷ்ணா, ரவிராய் ஆகியோர் அடித்து கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்து தப்பினர். அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1,127 சவரன் தங்க நகைகள், 2 வைர மூக்குத்திகள், வெள்ளி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. மே 10-ம் தேதி ராயபுரத்தில் திமுக பிரமுகர் சக்கரபாணி கொலை செய்யப்பட்டு உடல்கள் துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மூன்று நாட்களுக்கு பிறகே அவர் கொலை செய்யப்பட்ட தகவல் போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து தமிம்பானு, அவரது சகோதரர் வாசிம் பாஷா, ஆட்டோ ஓட்டுநர் டில்லிபாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அடையாறில் வீசப்பட்ட சக்கரபாணியின் தலையை காவல் துறையினர் தேடிவரும் நிலையில் இதுவரை தலை கிடைக்கவில்லை.

மே 11-ம் தேதி கோயம்பேட்டில் கள்ளகாதலியோடு பேசியதால் சுப்பரமணியன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராமச்சந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே நாளில் சென்னை மணலியில் குடும்பத் தகராறில் தந்தை பாலசுப்பிரமணியை கொலை செய்த அவரது மகன் சிவக்குமாரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மே 16-ம் தேதி மீஞ்சூர் பகுதியில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் குடும்பத்தோடு காரில் சென்று கொண்டிருந்த போது கூலிப்படையை சேர்ந்த கும்பல் சினிமாவில் வருவது போல் லாரியை ஏற்றி கொடூரமாக கொலை செய்தது. இதில் தொழிலபதிபர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

மே 16-ம் தேதி மதுரவாயல் பகுதியில் மதுபோதையில் தகராறு செய்து ஆபாசமாக பேசியதால் ராஜேந்திரன் என்பவரை குடும்பத்தாரே கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய அவரது மனைவி, மகள் மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மே 17-ம் தேதி சென்னை ஆதம்பாக்கத்தில் ரவுடி விக்கி மதுபோதையில் அதே பகுதியை சேர்ந்த மாணவியை காதலிக்க சொல்லி வலியுறுத்தி அவரது வீட்டின் முன்பு நின்று கையில் கத்தியோடு தகராறில் ஈடுபட்டுள்ளார். அதை தட்டிகேட்ட மூதாட்டி வள்ளாத்தாளை ரவுடி விக்கி கொடூரமாக கொலை செய்தார். இது தொடர்பாக விக்கியை காவல் துறையினர் கைது செய்தனர்.

மே 18-ம் தேதி சென்னை அமைந்தகரை செனாய் நகர் பகுதியில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் பைனான்சியர் ஆறுமுகம் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இரண்டு பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மற்றவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மே 18-ம் தேதி கொரட்டூர் பாடி மேம்பாலத்தில் பிளாட்பாரத்தில் தூங்குவதில் ஏற்பட்ட தகராறில் அய்யப்பன் என்பவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். மே 19-ம் தேதி சென்னை கொருக்குப்பேட்டையில் பணத்தை பெற்று கொண்டு போதை மாத்திரை வாங்கித் தராத ஆத்திரத்தில் ராகுல் என்பவரை கௌரிசங்கர், சரவணன், ரகுராமன் ஆகியோர் கொலை செய்து விட்டு காவல் துறையில் சரணடைந்தனர். மே 20-ம் தேதி வளசரவாக்கத்தில் சொத்துக்காக தந்தையை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி பேரலில் வைத்து வேலூர் காவேரிப்பாக்கத்தில் உள்ள காலி இடத்தில் புதைத்த மகனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மே 24-ம் தேதி சிந்தாதிரிபேட்டையில் முன்விரோதம் காரணமாக பாஜக பிரமுகர் பாலச்சந்தரை ரவுடி கும்பல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மே 25-ம் தேதி பூந்தமல்லி அருகே தலை, கை வெட்டப்பட்ட நிலையில் ஒருவரை எரித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இவர் யார் என்பது குறித்து திருவேற்காடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 25 நாட்களில் முன் விரோதம் காரணமாக 8 கொலைகளும், ஒரு ஆதாய கொலையும், குடும்ப தகராறு மற்றும் சொத்து தகராறு காரணமாக 5 கொலைகளும், ரவுடிகள் மற்றும் தொழிற்போட்டியால் 3 கொலைகள் என மொத்தம் 18 கொலைகள் நடந்துள்ளன. சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட இடங்களில் மட்டும் கடந்த 25 நாட்களில் 13 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஆவடி காவல் ஆணையரத்திற்குட்பட்ட பகுதியில் 5 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்தாண்டு மட்டும் தமிழகம் முழுவதும் 1,597 கொலைகள் நடந்துள்ளன.

SCROLL FOR NEXT