க்ரைம்

சுவற்றுக்குள் 19 கிலோ வெள்ளி, ரூ.9.78 கோடி பணம் பதுக்கல்: பதறிய அதிகாரிகள்!

காமதேனு

திரைப்பட பாணியில் டைல்ஸ்க்கு அடியில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 கோடியே 78 லட்ச ரூபாய் நோட்டுக்களையும், 19 கிலோ வெள்ளிக்கட்டிகளையும் வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டுபிடித்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரம் மாநிலத்தில் சாமுண்டா என்ற நிறுவனம் தங்க விற்பனையில் ஈடுபட்டு வந்தது. இந்நிறுவனம் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. கடந்த 2009-ம் ஆண்டு நிதியாண்டில் 22 லட்ச ரூபாயாக இருந்த நிறுவனத்தின் வருவாய், கடந்த 2020-ம் ஆண்டு 652 கோடி ரூபாயாகவும், 2021-ம் ஆண்டு 1764 கோடி ரூபாயாகவும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் இந்த நிறுவனம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக சாமுண்டா நிறுவனம் மறைமுகமாக நடத்தி வந்த வர்த்தக நிறுவனத்தில் வருமானவரித்துறை மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சுவர் மற்றும் தரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்க்கு கீழே கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மொத்தம் 9 கோடியே 78 லட்ச ரூபாய் மற்றும் 19 கிலோ வெள்ளிக்கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பதுக்கல் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திரைப்பட பாணியில் பணம், வெள்ளிக்கட்டிகள் பதுக்கப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT