சினிமா

கோடியுடன் வந்த நிறுவனம்... உதறித்தள்ளிய நடிகர் யாஷ்: பாராட்டும் நெட்டிசன்கள்

காமதேனு

அசத்தலான முடிவை எடுத்ததற்காக கே.ஜி.எஃப் ஹீரோ, நடிகர் யாஷை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

பிரபல கன்னட நடிகர் யாஷ். இவர் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கிய ‘கே.ஜி.எஃப்’ படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, ’கே.ஜி.எஃப் சாப்டர் 2’ படம் உருவானது. கடந்த 14-ம் தேதி ரிலீஸ் ஆன இந்தப் படம் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து இந்தியா முழுவதும் பிரபலமான ஹீரோவாக மாறியிருக்கிறார் யாஷ்.

இந்நிலையில், பிரபல பான் மசாலா நிறுவனம் ஒன்று அதன் விளம்பரத்தில் நடிக்க யாஷை தொடர்பு கொண்டது. ஆனால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த விளம்பரத்தில் நடிக்க, அவர் மறுத்துவிட்டார். இதை அவருடைய விளம்பர ஒப்பந்தங்களை நிர்வகிக்கும் அர்ஜுன் பானர்ஜி என்பவர் தெரிவித்துள்ளார்.

”சமீபத்தில் பல கோடி மதிப்புக்க பான் மசாலா விளம்பர வாய்ப்பை மறுத்துவிட்டோம். யாருடன் இணையவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். யாஷை பின்பற்றும் ரசிகர்களுக்கு நல்ல செய்தியை வழங்கவும், மனசாட்சியுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவும் விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

கடந்த வாரம், பான் மசாலா விளம்பரத்தில் இந்தி நடிகர் அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், ஷாருக்கானுடன் நடித்தது சர்ச்சையானது. இதையடுத்து ரசிகர்களிடமும் நலம் விரும்பிகளிடமும் மன்னிப்புக் கேட்டார் அக்‌ஷய். இனி அதுபோன்ற விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் யாஷ், பான் மசாலா விளம்பரத்தில் நடிப்பதை நிராகரித்திருப்பதையடுத்து சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

SCROLL FOR NEXT