சினிமா

யார் இந்த மனோபாலா?- இயக்குநர் முதல் நடிகர் வரை கடந்து வந்த பாதை!

காமதேனு

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் மனோபாலா. இவர், 1982-ம் ஆண்டு வெளியான `ஆகாய கங்கை' திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து, பல படங்களை இயக்கினார். 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ள மனோபாலா, 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிறந்த வீணை வாசிப்பாளராகவும் இருந்த மனோபாலாவுக்கு தஞ்சை திருவையாறுதான் பூர்விகம். சினிமா மீதான மோகத்தில் இருந்த இவர், உதவி இயக்குநராக வேண்டும் என்ற இலக்குடன் இருந்து வந்தார். இதனிடையே, கமல்ஹாசனின் நட்பு கிடைத்தது. ஒரு கட்டத்தில் ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் உதவி இயக்குநரானார் மனோபாலா. உதவி இயக்குநராக இருக்கும் போதே மனோபாலாவின் சாமர்த்தியம், அதிரடியாக எடுக்கிற முடிவு எல்லாமே அவருக்கு பின்னாளில் ரொம்பவே பயன்பட்டது. தொடர்ந்து, ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’ என வரிசையாகப் படங்களில் பணியாற்றினார். ஒருகட்டத்தில் பாக்யராஜ் இயக்குநரானது போல, அடுத்த சிஷ்யரான மணிவண்ணனும் இயக்குநரானார். மனோபாலாவும் வெளியே வந்தார். கார்த்திக்கையும் சுஹாசினியையும் வைத்து ‘ஆகாயகங்கை’ படத்தை முதன் முதலாக இயக்கினார். இளையராஜா இசையில் பாடல்கள் எல்லாமே அருமையாக அமைந்தன.

இதையடுத்து அடுத்த படத்துக்கு கதைகளை தயாரித்து வைத்திருந்தாலும், பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில், கன்னடப் படமான ‘கோகிலா’ படத்தில் கமலுடன் நடித்த மோகன், தமிழுக்கு வந்து வாய்ப்புகள் தேடிக்கொண்டிருந்தார். அப்போது தன் ஸ்கூட்டரில் மோகனை அழைத்துச் சென்று, மோகனுக்கு பட வாய்ப்பு கேட்டவர்கள் இரண்டு பேர். ஒருவர் மனோபாலா. இன்னொருவர் ஸ்டில்ஸ் ரவி. அந்த உதவி நன்றியுணர்வாக மாறி, மீண்டும் உதவியாக வந்து நின்றதுதான் அழகிய தருணம்.

அப்போது மோகனுக்கு வாய்ப்புகள் பெரிதாகக் கிடைக்கவில்லை. ‘பயணங்கள் முடிவதில்லை’ எல்லாம் வந்த பிறகு ஓய்வெடுக்கக் கூட மோகனுக்கு நேரமில்லை. இந்த சமயத்தில், தயாரிப்பாளர் ஒருவர், மோகனிடம் கால்ஷீட் கேட்டார். ‘கால்ஷீட் தரேன். ஆனா ஒரு கண்டிஷன். மனோபாலாவைத்தான் டைரக்டரா போடணும்’’ என்றார் மோகன். ‘அப்படி மனோபாலாவை டைரக்டராப் போட்டா, உடனே கால்ஷீட் தரேன்” என்று உறுதியும் கொடுத்தார்.

அந்தத் தயாரிப்பாளர் மனோபாலாவைத் தேடிக் கண்டுபிடித்தார். கையில் இருக்கும் காசுக்கு தோசை வாங்கிச் சாப்பிட்டால் பிறகு அங்கே இங்கே செல்வதற்கு என்ன செய்வது என்று யோசித்தபடியே பாண்டிபஜார் கையேந்திபவனில் ஓரமாக நின்றுகொண்டிருந்தவரை ‘டைரக்டர் சார்’ என்று குரல் கொடுத்து அழைத்தார் தயாரிப்பாளர். அங்கே அவரின் வாழ்வில் திருப்பம் ஏற்பட்டது. உடனே மோகனை சந்தித்தார். ‘’இவருக்கு கால்ஷீட் கொடுக்கிறேன். உடனே ஒரு கதை ரெடி பண்ணுங்க மனோ. தினமும் நைட்ல கால்ஷீட் கொடுக்கிறேன். நடிச்சுக் கொடுக்கிறேன்’’ என்று நடிகர் மோகன் சொன்னார். மனோபாலாவும் இரவில் வரும் காட்சிகளாகக் கொண்டு கதையை உருவாக்கினார். இளையராஜாவின் இசையில் ‘பிள்ளை நிலா’ உருவானது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் பிஜிஎம், தனிச் சாதனை படைத்தது.

அடுத்து நடிகர் மோகனுக்காக ஆரம்பக் கட்டத்தில் உதவிய நண்பர் ஸ்டில்ஸ் ரவி. அவரைத் தயாரிப்பாளராக்கினார் மோகன். மனோபாலாவை இயக்கச் செய்தார். ‘நான் உங்கள் ரசிகன்’ உருவானது. இந்த இரண்டு படங்களிலும் ராதிகாவுடனான நட்பு பலப்பட்டது. ராதிகா சொன்னால் மனோபாலா இயக்குவார். மனோபாலா சொன்னால், ராதிகா நேரம் ஒதுக்கி நடித்துக் கொடுத்துவிடுவார். அந்த அளவுக்கு அவர்களின் நட்பு இருந்தது.

இதன் பின்னர் சத்யா மூவிஸ் நிறுவனம் ரஜினியின் கால்ஷீட்டை வைத்துக்கொண்டு மனோபாலாவை அணுகியது. ராதிகாவையும் இணைத்துக் கொண்டு ‘ஊர்க்காவலன்’ படத்தை இயக்கினார். அந்தப் படம் மாபெரும் வெற்றி. அடுத்து விஜயகாந்தையும் ராதிகாவையும் வைத்து ‘சிறைப்பறவை’ என்று இயக்கினார். இதன் பின்னர் ’என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான்’ என்று விஜயகாந்த், சுஹாசினி, ரேகா என மூவரையும் வைத்து இயக்கிய படமும் வெற்றி பெற்றது.

இதையடுத்து, மூடு மந்திரம், வெற்றிப்படிகள், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், ‘செண்பகத்தோட்டம்’ என்று வரிசையாகப் படங்களை இயக்கினார் மனோபாலா. அன்றைக்கு பாலசந்தர், பாரதிராஜா, மனோபாலா என பல இயக்குநர்களும் வெற்றி இயக்குநர்களாக பவனி வந்தார்கள். நடுவே தொலைக்காட்சிப் பக்கமும் சென்றார். பல தொடர்களை இயக்கி அங்கேயும் தனி முத்திரையைப் பதித்தார் மனோபாலா.

இதன் பின்னர் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவான ‘நட்புக்காக’ படத்தில் மனோபாலாவை நடிக்கவைத்தார். அதன்பின்னர் படத்தில் நடிக்க வாய்ப்பு குவிந்தது. 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கிய மனோபாலா இன்று நம்மிடத்தில் இல்லை.

SCROLL FOR NEXT