சினிமா

`பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தியின் உடைக்கு கஷ்டப்பட்டோம்- ஏகா லகானி!

காமதேனு

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தின் உடைக்காகக் கஷ்டப்பட்டோம் என அதன் ஆடை வடிவமைப்பாளர் ஏகா லகானி தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியானது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆகியிருக்கும் நிலையில் உலகம் முழுவதும் 300 கோடி வசூலை படம் நெருங்கியுள்ளது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் படம் பெற்று வருகிறது.

படத்தில் நடிகர்களின் உடைகளும் பலரது கவனத்தை ஈர்த்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இதுபோன்ற ஒரு சரித்திரப் புனைவு கதாபாத்திரங்களுக்கு ஆடை வடிவமைத்ததில் இருந்த சவால்கள் மற்றும் அனுபவம் குறித்து இதன் ஆடை வடிவமைப்பாளர் ஏகா லகானி பகிர்ந்து கொண்டதாவது:

“இந்தப் படத்தில் ஒவ்வொரு நடிகரது தோற்றமும் இறுதி செய்வதற்கு முன்பு நிறைய தகவல்களைத் திரட்டினோம். தஞ்சாவூர் சென்று அங்குள்ள கோயில்களில் உள்ள சிற்பங்களையும் புரிதலுக்காகப் பார்த்தோம். அதில் இருந்தும் செய்திகள் எடுத்துக் கதாபாத்திரங்களின் உடைகளில் கவனம் செலுத்தினோம். வரலாறு தெரிந்த பலரிடமும் பேசி தகவல்களை எடுத்துக் கொள்ள இயக்குநர் மணிரத்னம் பல வரலாற்று ஆசிரியர்களின் அறிமுகத்தைக் கொடுத்தார்.

’பொன்னியின் செல்வன்’ படத்திலேயே நடிகர் கார்த்தி ஏற்று நடித்த வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு ஆடை வடிவமைக்கதான் அதிக சிரமப்பட்டோம். கதைப்படி வந்தியத்தேவன் ஒரு இளவரசன், போர்வீரன் மற்றும் உளவாளியாகவும் இருப்பான். இந்த மூன்றையும் சமரசம் செய்தே அவருக்கு உடை வடிவமைக்க வேண்டும் என்பது எங்களுக்கு சவாலாக இருந்தது.

அதேபோல, ஒவ்வொருவரின் நகையும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே குந்தவை, நந்தினி கதாபாத்திரங்களுக்கு அப்படியான நகைகளைத் தேர்ந்தெடுத்தோம். படத்தில் நந்தினியும், குந்தவையும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சி எனக்கு மிகப் பிடித்தமானது” என்றும் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT