சினிமா

ட்ரெண்டான `ஆர்ஆர்ஆர்' டூர் ஷெட்யூல்

காமதேனு

‘பாகுபலி’ படம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் இயக்குநர் ராஜமௌலி. தெலுங்கில் மட்டும் தெரிந்த முகமாய் இருந்த ராஜமௌலி, பாகுபலிக்கு பிறகு ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற பிரமாண்ட திரைப்படத்தை இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோருடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, ஆகிய ஐந்து மொழிகளில் உருவான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம், கடந்தாண்டு அக்டோபர் 13-ம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, பல காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. கடைசியாக கடந்த ஜனவரி 1-ம் தேதி, ஆர்ஆர்ஆர் ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுகிறது என படக்குழு அறிவித்திருந்தது.

ஒருவழியாக ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்.ஆர்.ஆர் டீம் ஒரு மாரத்தான் புரொமோஷன் ஷெட்டியூல் போட்டிருக்கிறது. ஏழு நாட்களில் ஒன்பது நாடுகளுக்கு விசிட் செய்து தங்கள் படம் குறித்து பெருமை பேச திட்டமிட்டு போட்டுள்ள டூர் ஷெட்யூல் ட்ரெண்டாகிறது.

தமிழில் லைகா நிறுவனம் வெளியிடும் இப்படத்தில் பாடலாசிரியர் மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். இவர் ஏற்கெனவே பாகுபலி படத்துக்கு வசனம் எழுதியிருந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

SCROLL FOR NEXT