பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் 
சினிமா

இளையராஜா இசையில் வெப் சீரிஸாகிறது ’பொன்னியின் செல்வன்’

காமதேனு

’பொன்னியின் செல்வன்’ நாவல் வெப்சீரிஸாக உருவாகிறது. இதை எம்ஜிஆருடன் ’ஜெனோவா’ படத்தில் நாயகியாக நடித்த ஓமனாவின் மகன் அஜய் பிரதீப் இயக்குகிறார்.

கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் திரைப்படமாக்க எம்ஜிஆர் உட்பட பலர் முயன்றனர். எதுவும் நடக்கவில்லை. இப்போது லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாக ’பொன்னியின் செல்வனை’ உருவாக்கியுள்ளார். இதில், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதற்கிடையே, பல விளம்பரம் மற்றும் ஆவணப்படங்களை இயக்கியுள்ள அஜய் பிரதீப், இதை வெப் சீரிஸாக இயக்க இருக்கிறார். இதை, எட்டர்னிட்டி ஸ்டார் மற்றும் எட்டர்னிட்டி மோஷன் கிராஃப்ட் ஹப் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் வழங்குகின்றன.

பல்வேறு மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த வெப்சீரிஸ், 12 சீசன்களில் 153 எபிசோட்களைக் கொண்டிருக்கும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இளையராஜா இசையமைக்கிறார். எம்ஜிஆரின் பிறந்தநாளான இன்று (ஜன.17), இந்தப் படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம் என்று அஜய் பிரதீப் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆருக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக, எம்ஜிஆர் நடிக்க விரும்பிய கதாபாத்திரங்களான அருள்மொழிவர்மன் மற்றும் வந்தியத்தேவன் வேடங்களில் போஸ்டர்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவும் வெப் சீரிஸில் பொன்னியின் செல்வனை உருவாக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT