சினிமா

`பெரிய நடிகன் என்கிறார்கள், என்னாலேயே நம்ப முடியவில்லை’: கமல்ஹாசன்

காமதேனு

``பெரிய நடிகன் என்கிறார்கள், என்னாலேயே அதை நம்பமுடியவில்லை'' என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

மறைந்த நடிகரும் முன்னாள் துணை அமைச்சருமான ஐசரி வேலனின் 35-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர், ஜானகி மகளிர் கல்லூரியில் அவரது திருவுருவச் சிலையை, நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார்.

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் வேல்ஸ் கல்வி குழுமத் தலைவரான ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நலிந்த நாடக நடிகர்களுக்கு வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின், இலவச குடும்ப சுகாதார அட்டை வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

பாக்யராஜ், கவுண்டமணி, கமல்ஹாசன், பிரசாந்த், எஸ்.வி.சேகர், ஐசரி கணேஷ்

நடிகர்கள் பிரபு, செந்தில், ராஜேஷ், கவுண்டமணி, எஸ்.வி.சேகர், பிரசாந்த், இயக்குநர்கள், கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, நடிகைகள் லதா, ராதிகா சரத்குமார், பூர்ணிமா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், ``ஐசரி வேலன் பொறுப்பும் பதவியும் வந்தபிறகும், நடிப்பின் மீதிருக்கும் காதலால் எங்களுடன் நடித்தார். அப்படி அவர் நடித்திருக்க வேண்டியதில்லை. இந்த இடம் ஷூட்டிங் அரங்கமாக இருந்தபோது பல காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டிருக்கின்றன. எம்.ஜி.ஆருக்கு ’சங்கே முழங்கு’, பிறகு ’நான் ஏன் பிறந்தேன்’ படத்திற்கான பாடல்கள் இந்த அரங்கத்தில் எடுக்கப்பட்ட ஞாபகங்கள் வருகிறது.

நான் அப்போது உதவி நடன இயக்குநர். என் நினைப்பில், நான் இன்னும் அப்படித்தான் இருக்கிறேன். நடுவில் பெரிய போஸ்டர்லாம் போட்டு பெரிய நடிகன் என்று சொல்கிறார்கள், என்னாலேயே நம்ப முடியவில்லை. என் பழைய நினைவுகளை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இங்கே ஐசரி கணேஷ் செய்யும் பணிகளை பாராட்டாமல் இருக்க முடியாது. அவர் தொடர்ந்து நல்ல காரியங்களை செய்ய வேண்டும்'' என்றார்.

SCROLL FOR NEXT