'மேக் அப்' படத்திலிருந்து
'மேக் அப்' படத்திலிருந்து 
சினிமா

பிணத்துக்கு ‘மேக் அப்’ போடும் பெண்!

சாதனா

தங்களின் அன்புக்குரியவர்கள் மரணமடைந்துவிட்டால் அதை ஏற்க மனம் மறுக்கும், சிதைவுற்ற அவர்களது உடலை கண்டால் உள்ளம் பரிதவிக்கும். மரணம் சம்பவித்தவர்களின் அழகிய வதனத்தை மீட்டுருவாக்கம் செய்யக்கூடியவர்கள் கிடைத்தால் இறுதி மரியாதையை முழுவதுமாக செலுத்தலாம் என நினைப்பவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு ஆறுதல் தரும் விதமாகப் பிணங்களுக்கான அழகுக்கலை நிபுணராக இருக்கிறார் மின்சியூ எனும் இளம் பெண்.

பிணவறைக்கு வந்து சேரும் பிணங்களுக்கு அலங்காரம் செய்வதை வழக்கமாக அவர் கொண்டிருக்கிறார். ஒருநாள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது தனக்கு மேல்நிலைப் பள்ளி நாட்களில் இசை பயிற்றுவித்த ஆசிரியை சென் என்பது தெரியவர திகைத்துப் போகிறாள் மின்சியூ. உடனடியாக கடந்த கால நினைவலைகள் அவள் மனத்துக்குள் ஓடத் தொடங்குகிறது. அது மட்டுமல்லாமல் பிரேதமாக கிடக்கும் தனது ஆசிரியை தற்கொலை செய்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக மின் சியூவுக்கு உள்ளுணர்வு ஏற்படுகிறது.

ஆசிரியை மாணவி என்பதை கடந்து மின்சியூவும் சென்னும் அன்யோன்மாக பழகிய நாட்கள் அவை. இவற்றையெல்லாம் மின்சியூ அசைபோட்டபடி இருக்கிறாள். அந்த சமயம் மின்சியூவை சந்திக்க அங்கு வரும் துப்பறிவாளர் ஒருவர் ஆசிரியை சென் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தை கிளப்பிவிடுகிறார். தனது உள்ளுணர்வை உறுதிப்படுத்திக் கொண்டு மின்சியூவும் தனியாக மரணத்துக்கான காரணத்தைத் தேடிச் செல்கிறாள். இப்படி பல்வேறு மர்ம முடிச்சுகளும் எதிர்பாராத திருப்புமுனைகளும் நிறைந்த தைவான் மொழி திரைப்படம் ‘மேக் அப்’. இந்த படம் உட்பட சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஐந்து தைவானீஸ் திரைப்படங்கள் சென்னையில் திரையிடப்படவிருக்கின்றன.

சென்னை சர்வதேசப் படவிழாவை ஒருங்கிணைத்துவரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கம், சென்னையில் உள்ள தைபெ பொருளாதார மற்றும் கலாச்சார மையத்துடன் இணைந்து வரும் மே 23, 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் தைவானீஸ் திரை விழாவை நடத்தவிருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் பிரான்சிஸ் மையத்தில் மாலை 6 மணிக்கு தொடக்க விழா நடைபெறும். தொடக்க விழாவில் நடிகை ரம்யா பாண்டியன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைப்பார். சென்னையில் உள்ள தைபெ பொருளாதார மற்றும் கலாச்சார மையத்தின் பொது இயக்குநர் பென் வேங்க், இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனின் துணை தலைவர் ராமகிருஷ்ணன் , திரைப்பட இயக்குநர் ரத்தீந்திரன் பிரசாத் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கத்தின் பொதுச் செயலாளர் தங்கராஜ் மற்றும் தலைவர் சிவன் கண்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க மேலும் பலர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். மாலை 6:30-க்கு திரையிடல் நிகழவிருக்கிறது.

தொடர்புக்கு: 9840151956 / 8939022618

மிஸ்ஸிங் ஜானி
மர்மர் ஆஃப் தி ஹார்ட்ஸ்
ஹெவி கிரேவிங்
டு மை டியர் கிரானி

தைவானீஸ் திரை விழா மே, 2022

1. ’மிஸ்ஸிங் ஜானி’ (Missing Johnny) – 104 நிமிடங்கள் -மே 23, மாலை 6:30

2. ’மர்மர் ஆஃப் தி ஹார்ட்ஸ்’ (Murmur of the Hearts) - 119 நிமிடங்கள் -மே 24, மாலை 5:30

3. ’ஹெவி கிரேவிங்’ (Heavy Craving) - 89 நிமிடங்கள் - மே 24, மாலை 7:30

4. ’டு மை டியர் கிரானி’ (To My Dear Granny) - 85 நிமிடங்கள் - மே 25, மாலை 5:30

5. ’மேக் அப்’ (Make Up) – 107 நிமிடங்கள் - மே 25, மாலை 7

SCROLL FOR NEXT