யாஷ், தங்கம்
யாஷ், தங்கம் 
சினிமா

யார் இந்த தங்கம்?‍ `கே.ஜி.எஃப்2'வில் ராக்கி பாய் கேரக்டர் உருவாக்கப்பட்ட ரகசியம்

காமதேனு

கே.ஜி.எஃப் 2 படத்தின் ராக்கி பாய் கேரக்டர், என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ஒருவரின் வாழ்க்கைக் கதையில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம், 'கே. ஜி. எஃப்: சாப்டர் 2’. யாஷ், ராக்கி பாய் என்ற கேரக்டரில் மிரட்டலாக நடித்திருக்கிறார். அவரது ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த 14-ம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் சாதனைப் படைத்து வருகிறது.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படத்தை எடுத்துள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், போலீஸாரால் என்கவுன்டரில் கொல்லப்பட்ட தங்கம் என்பவரின் வாழ்க்கைக் கதையில் இருந்து ராக்கி பாய் கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கோலார் தங்க வயலில் வேலை செய்துவந்த தங்கம், அங்கு ஒரு கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் போலீஸாருக்கு சவாலாக விளங்கிய அவர், கடத்திய தங்கங்களை ஏழைகளுக்கு வழங்கி ’ஜூனியர் வீரப்பன்’ என்று பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

சந்தனக் கடத்தல் வீரப்பனுக்குப் பிறகு கர்நாடகாவில் போலீஸாருக்கு சவாலாக இருந்தவர் அவர். 42 வழக்குகள் இருந்த நிலையில் சித்தூர் அருகில் உள்ள குப்பத்தில், அவர் 1997-ம் ஆண்டு, என்கவுன்டர் செய்யப்பட்டார். அப்போது தங்கத்துக்கு வயது 25.

இந்த தங்கத்தின் வாழ்க்கைக் கதையில் இருந்துதான் ராக்கி பாய் கேரக்டரை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி தங்கத் தின் அம்மா பவுலி (Pouli) கூறும்போது, ``என் மகனின் கதையை என் அனுமதி இல்லாமல் படமாக்கி உள்ளனர். முதல் பாகத்தில், கெட்டவனாக சித்தரித்திருந்தனர். அடுத்தப் பாகத்தில் நல்லவனாகவே காட்டுவோம் என்று உறுதி அளித்திருந்தனர். ஆனால் மாற்றி எடுத்துள்ளனர். இதனால் வழக்குத் தொடர உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே தங்கத்தின் வாழ்க்கைக் கதையில் இருந்து இந்தப் படத்தை உருவாக்கவில்லை என்றும் இயக்குநர் பிரசாந்த் நீலுக்கு தங்கம் யார் என்பதே தெரியாது என்றும் படக்குழு மறுத்துள்ளது.

SCROLL FOR NEXT