சினிமா

ரஜினியின் `ஜெயிலர்’ படத்தில் தமன்னாவுக்கு கெஸ்ட் ரோலா?

காமதேனு

ரஜினியின் ’ஜெயிலர்’ படத்தில் தமன்னா கெஸ்ட் ரோலில்தான் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

சிவா இயக்கிய 'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து 'ஜெயிலர்' படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். ரஜினிகாந்தின் ’எந்திரன்’, ’பேட்ட’, ’அண்ணாத்த’ படங்களைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இதில் தமன்னா, கன்னட ஹீரோ சிவராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை ராயப்பேட்டையில் உள்ள பழைய உட்லண்ட்ஸ் ஓட்டலில் நேற்று தொடங்கியது. இதில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் ரஜினிகாந்தின் தோற்றம் சமூக வலை தளங்களில் வைரலானது.

இந்நிலையில் இந்தப் படத்தில், தமன்னாவுக்கு கெஸ்ட் ரோல்தான் என்றும் அவருக்கு அதிக காட்சிகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே தமன்னா, இந்தப் படத்துக்கு சம்மதித்ததாகவும் இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார் என்றும் அது பற்றி விரைவில் அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT