இயக்குநர் சுதா கொங்கரா
இயக்குநர் சுதா கொங்கரா  
சினிமா

’சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கில் நடிப்பது யார்?

காமதேனு

’சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கிற்கான வேலைகளில் இருப்பதாக இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், மோகன்பாபு, ஊர்வசி, கருணாஸ் உட்பட பலர் நடித்த படம், ’சூரரைப் போற்று’. சிக்யா என்டர் டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து. தனது 2 டி என்டர்டெயின்மென்ட் மூலம் படத்தைத் தயாரித்திருந்தார் சூர்யா. சுதா கொங்கரா இயக்கிய இந்தப் படம், கரோனா காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

ஏர் டெக்கான் விமான நிறுவன உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து, இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருந்தது.

சூரரைப் போற்று - சூர்யா, அபர்ணா பாலமுரளி

இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கை சுதா கொங்கரா இயக்க இருக்கிறார். அதற்கான முன் தயாரிப்புப் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். அஜய்தேவ்கன், அக்‌ஷய்குமார், ஹிருத்திக் ரோஷன் அல்லது ஜான் ஆபிரகாம் ஆகியோரில் ஒருவர், சூர்யா நடித்த கேரக்டரில் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், அதிகாரபூர்வமானத் தகவல் வெளிவரவில்லை.

இதுபற்றி சுதா கொங்கரா கூறும்போது,“ஓடிடி தளங்கள் மூலம் பிராந்திய எல்லைகள் உடைந்துள்ளன. மொழி ஒரு பிரச்னையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தளங்கள் உண்மையிலேயே உலகை ஒன்றிணைக்கிறது. வரலாற்றில் இது ஒரு சிறப்பான தருணம்” என்ற சுதா, சூரரைப் போற்று இந்தி ரீமேக் பற்றி சொன்னார்.

அவர் கூறும்போது, ‘‘என்னைப் பொறுத்தவரை ஒரு நடிகரை அணுகுவதற்கு முன் ஸ்கிரிப்ட் தயாராக இருக்கும். அந்த கேரக்டர் என்ன பேசப்போகிறது, இந்தியாவின் எந்த இடத்தில் கதை நடக்க இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். பிறகுதான் நடிகரை தேர்வு செய்வேன். ’சூரரைப் போற்று’ப் படம் தமிழ் மற்றும் தென்னிந்திய உணர்வுடன் எடுக்கப்பட்டுள்ளது. அதில் மாற்றம் செய்யப்பட வேண்டும். அதற்கான வேலை நடந்து வருகிறது’’ என்றார்.

SCROLL FOR NEXT