சினிமா

புராணக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?- ராஜமவுலி

காமதேனு

``புராணக் கதைகள் என் ரத்தத்தில் முழுமையாக ஊறியிருக்கிறது'' என்று இயக்குநர் ராஜமவுலி கூறினார்.

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடித்துள்ள படம் ஆர் ஆர் ஆர். அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி உட்பட பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, இந்தப் படம் வரும் 25 -ம் தேதி வெளியாகிறது. மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.

தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான, அல்லுரி சீதாராமராஜு, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கைக் கதையை கொண்ட இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி வட இந்தியாவில் நடந்து வருகிறது.

இயக்குநர் ராஜமவுலி கூறும்போது, ``புராண மற்றும் தொன்மக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்று கேட்கிறார்கள். நான் அதுபோன்ற கதைகளால் அதிகமாக ஈர்க்கப்பட்டுள்ளேன். குழந்தையாக இருக்கும்போது என் தாத்தா, பாட்டிகளிடம் இருந்து அதுபோன்ற கதைகளை அதிகமாகக் கேட்டு வளர்ந்தவன்.

அதனால், அந்தக் கதைகள் என் இரத்தத்தில் முழுமையாக ஊறியிருக்கிறது. அது என் படங்களில் வெவ்வேறு வடிவங்களில் வெளிவருகிறது. அப்படி வெளிப்படுவதை பெருமையாகவே நினைக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT