நடிகர் விஜய்
நடிகர் விஜய் 
சினிமா

ஒன்று திரண்ட விஜய் பட இயக்குநர்கள்...விஜய் பிறந்தநாளில் இலங்கைக் கவிஞரின் புதுமுயற்சி!

என்.சுவாமிநாதன்

நடிகர் விஜய் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று மிகவும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையின் பிரபல கவிஞர் அஸ்மின், விஜயின் பிறந்தநாளுக்கு என ’அண்ணா’ என்னும் சிறப்புப் பாடலை எழுதி, வீடியோ வடிவில் ரிலீஸ் செய்துள்ளார். இந்தப் பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

பகவதி பட இயக்குனர் வெங்கடேஷ்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னணி தமிழக திரை நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் ஆகியோரைப் பற்றி பாடல்களை எழுதி, இணையத்தில் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் 'சிறந்த பாடலாசிரியர்' என கொண்டாடப்படுபவர் ஈழத்துக் கவிஞர் அஸ்மின். ’நான்’ திரைப்படத்தில் "தப்பெல்லாம் தப்பே இல்லை" பாடலின் மூலமாக நடிகர் விஜய் ஆண்டனியால் திரைத்துறையில் பாடலாசிரியராகவும் அறிமுகப்படுத்தப்பட்டவர்.

இவர் இன்று நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, 'அண்ணா' எனும் பெயரில் பிரத்யேக பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். விஜய் ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடலாக உருவாகியிருக்கும் இந்தப் பாடலை யுகே மாலா குமார் படைப்பகம் எனும் நிறுவனம் தயாரித்து யூடியூப் தளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

விஜய்யின் 'அண்ணா' பாடலை கவிஞர் அஸ்மின் எழுத, ஈழத்து பாடகர் கஜீபன் செல்வம், பின்னணி பாடகி ஸ்ரீநிதி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். பாடலுக்கு சிந்துஜன் வெற்றிவேல் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலுக்கான படத்தொகுப்பை கதிர் ராஜசேகரம் செய்துள்ளார்.ஒலிக்கலவையினை ஆர்.கே.சுந்தர் செய்துள்ளார்.

பாடலின் முதல் பார்வையினை தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன், விஜய் நடிப்பில் ‘சிவகாசி’ ‘திருப்பாச்சி’ படங்களை இயக்கிய பேரரசு, விஜயின் ‘பகவதி’ திரைப்பட இயக்குநர் ஏ.வெங்கடேஷ், விஜய் வழக்கறிஞராக நடித்த ‘தமிழன்’ திரைப்பட இயக்குநர் மஜீத், நடிகர் விஜய் நடித்த ‘கோயமுத்தூர் மாப்பிள்ளை’ இயக்குநர், நடிகர் சி.ரங்கநாதன், ’லவ்டுடே’ இயக்குநர் பாலசேகரன், ‘சுறா’ இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார், இயக்குநர் நடிகர் கின்னஸ்பாபு, நடிகர் சம்பத்ராம் ஆகியோர் வெளியிட்டனர்.

அதே போன்று பாடல் ஆல்பத்தினை ’லவ்டுடே’ இ்யக்குநர் பாலசேகரன், ’ஷாஜஹான்’ இயக்குநர் ரவி, இயக்குநர் ராசய்யா கண்ணன், இயக்குநர் ஸ்டீபன், இயக்குநர் காவியன், தயாரிப்பாளர் மதுரை செல்வம், ’கயல்’ திரைப்பட புகழ் வின்சன் நகுலன் ஆகியோர் வெளியிட்டனர். நிகழ்ச்சியினை இயக்குநர் குணாஜீ தொகுத்து வழங்கினார்.

.

இயக்குனர் பேரரசு வெளியிட்ட போது

இதுகுறித்து பாடலாசிரியர் கவிஞர் அஸ்மின் காமதேனு இணையத்திடம் பேசுகையில், '' 'அண்ணா' என்பது தமிழகத்தின் திராவிட அரசியலிலிருந்து பிரிக்க இயலாத உணர்வுடன் கூடிய சொல். 'அண்ணா' என்பது உடன்பிறந்த உறவைக் குறிக்கும் உயர்ந்த சொல். இந்த பாடலில் விஜய் அவர்களைப்பற்றி சர்வதேச அளவிலான தமிழர்களின் பார்வை வரிகளாக இடம்பிடித்திருக்கிறது. விஜய்யை திரையில் தோன்றும் கதாபாத்திரத்தின் ஊடாக ரசிக்கும் ரசனையையும், நிஜவாழ்க்கையில் விஜய் தன் ரசிகர்கள் மீது கொண்டிருக்கும் பேரன்பையும் சம அளவில் ரசிகர்களை ஈர்க்க கூடிய வரிகளின் ஊடாக துள்ளலிசையுடன் இந்தப்பாடல் உருவாகியிருக்கிறது.

தளபதி விஜயின் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக இதை வெளியிட்டுள்ளோம். லண்டனில் வாழும் தொழிலதிபரும், சமூக சேவையாளருமான மாலா குமார் தனது "மாலா குமார் படைப்பகம்" ஊடாக தமிழ் சினிமாவில் கால் பதித்து சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்க இருக்கின்றார்.ஆர்வமுள்ள இயக்குனர்கள் மாலா குமார் படைப்பகத்தைத் தொடர்பு கொள்ளலாம். முக்கியமாக இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுக்கத் தயாராக உள்ளார்.” என்றும் கவிஞர் அஸ்மின் தெரிவித்தார்

பாடலைக் கேட்க...https://youtu.be/CEosE82UoaU

SCROLL FOR NEXT