சினிமா

கேன்ஸ் பிரீமியர் காட்சிக்கு முன் திடீரென மரணமடைந்த நடிகர்

காமதேனு

கேன்ஸ் விழாவில் திரையிடப்படுவதற்கு, சில மணி நேரம் முன் அந்தப் படத்தில் நடித்த நடிகர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும் 75-வது சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு நாட்டுப் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இருந்து மாதவன் இயக்கி நடித்துள்ள ’ராக்கெட்ரி’ படம் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. இதை போல, அல்ஜீரியாவைச் சேர்ந்த ’சன்ஸ் ஆஃப் ராம்செஸ்’ (Sons of Ramses) என்ற படம் திரையிடப்பட இருந்தது. அது திரையிடப் படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அதில் நடித்த காமெடி நடிகர் அஹமத் பெனைஸ்சா (Ahmed Benaissa) என்ற நடிகர் உயிரிழந்துள்ளார்.

அஹமத் பெனைஸ்சா

``அவர் இல்லாமல் இந்தப் படம் இல்லை. கேன்ஸில் இன்று படத்தைத் திரையிடும் நேரத்தில் எங்கள் சோகத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை'’ என்று அந்தப் படத்தின் இயக்குநர் கிளமெண்ட் கோகிடோர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தேசிய நாடகப் பள்ளியின் பயின்ற அஹமத் பெனைஸ்சா, சுமார் 120 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட. கேட்ஸ் ஆஃப் தி சன், கிளோஸ் எனிமீஸ் படங்களில் நடித்ததன் மூலம் அவர் மிகவும் பிரபலமானார் என்றும் கிளமெண்ட் கோகிடோர் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த அவர் அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 78. நடிகர் அஹமத் பெனைஸ்சா மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT