சினிமா

சமந்தாவின் புராணப் படத்துக்கு 10 மாதம் கிராஃபிக்ஸ்!

காமதேனு

சமந்தாவின் புராணப் படத்துக்கு கிராஃபிக்ஸ் வேலைகளுக்கு மட்டும் பத்து மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

புராண கதையான சகுந்தலை, 'சாகுந்தலம்' என்ற பெயரில் சினிமாவாகிறது. விசுவாமித்திர முனிவருக்கும், மேனகைக்கும் பிறந்த சகுந்தலை துஷ்யந்தனை காதலிக்கிறாள். பின்னர் துருவாச முனிவர் சாபத்தால் அந்த காதலையே துஷ்யந்தன் மறக்கும் நிலை ஏற்படுகிறது. பல கஷ்டங்களைத் தாண்டி துஷ்யந்தனுடன் சகுந்தலை எப்படி இணைகிறார் என்பது கதை.

இதில் சகுந்தலையாக நடிகை சமந்தாவும், துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகனும் நடித்துள்ளனர். மற்றும் அதிதி பாலன், அனன்யா நாகள்ளா, பிரகாஷ்ராஜ், மோகன் பாபு, கபீர் பேடி, மதுபாலா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார். இவர், ஏற்கெனவே அனுஷ்கா நடித்த, 'ருத்ரமாதேவி' மற்றும் தெலுங்கில் வெற்றி பெற்ற 'ஒக்கடு', 'அர்ஜுன்', 'சைனிகுடு' உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

தெலுங்கில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இதன் ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்டாலும் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

இதுபற்றி படக்குழு, கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு படத்தில் முக்கியத்துவம் இருக்கிறது. அதற்காக மட்டும் 10 மாதங்கள் தேவைப்படுகிறது. அந்த வேலைகள் நடந்துவருகின்றன. அது முடிந்த பின்பே பட ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளன.

இயக்குநர் குணசேகர், 'ருத்ரமாதேவி' படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகளைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்று கூறப்பட்டது. அந்தக் குறை தெரியக்கூடாது என்பதற்காக இந்தப் படத்துக்கு அவர் அதிக சிரத்தை எடுத்து வருகிறார் என்கிறார்கள்.

SCROLL FOR NEXT