சினிமா

பகீர் கொள்ளையன் கதை: பிரபல ஹீரோ படத்துக்கு ரூ.7 கோடியில் செட்!

காமதேனு

பிரபல ஹீரோ நடிக்கும் பான் இந்தியா படத்துக்காக ரூ.7 கோடியில் கிராமம் செட் அமைக்கப்படுகிறது.

ஆந்திராவில் 1970-ம் ஆண்டு வாழ்ந்த பிரபல கொள்ளையன், டைகர் நாகேஸ்வர ராவின் வாழ்க்கை கதை அதே பெயரில் சினிமாவாகிறது. பலமுறை சிறையில் இருந்து தப்பியுள்ள அவர், அங்கிருந்து எப்படித் தப்பித்தார் என்பதை ஆந்திர காவல்துறை பயிற்சி மையத்தில் பாடமாக வைத்துள்ளது. ஒரு கட்டத்தில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நுபுர் சனான், ரவிதேஜா, காயத்ரி பரத்வாஜ்

அந்தக் கொள்ளையனின் கதையை ‘டைகர் நாகேஸ்வரராவ்’ என்ற பெயரில் படமாக எடுத்து வருகின்றனர். இதில் ரவிதேஜா, டைகர் நாகேஸ்வர ராவாக நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் படம் உருவாகிறது. இதில் நுபுர் சனான், காயத்ரி பரத்வாஜ் நாயகிகளாக நடிக்கின்றனர்.

வம்சி இயக்கும் இதை ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை தயாரித்த அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது.

இது, 70-களில் நடக்கும் கதை. இதனால் தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் அருகே, ’டைகர் நாகேஸ்வரராவ்’ ஊரான ஸ்டூவர்ட்புரம் கிராமத்தை ரூ.7 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாக்குகின்றனர். இதைப் படக்குழு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT