சினிமா

’பட விழாவுக்கு பாவனாவை அழைத்தது தனிப்பட்ட முடிவு!’

காமதேனு

கேரள சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க விழாவில் நடிகை பாவனாவை அழைத்தது தனது தனிப்பட்ட முடிவு என்று கேரள கலாசித்திர அகாடமி தலைவர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் தொடங்கியுள்ள சர்வதேசத் திரைப்பட விழாவில் நடிகை பாவனா கலந்துகொண்டு குத்து விளக்கேற்றினார். 5 வருடங்களாகப் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத அவர், இந்த விழாவில் கலந்துகொண்டது ரசிகர்களுக்கு வியப்பாக இருந்தது. விழாவுக்கு வந்திருந்த ரசிகர்கள், பிரபலங்கள் எழுந்து நின்று கைதட்டி அவரை வரவேற்றனர்.

நிகழ்ச்சி நிரலில் பாவனா பெயர் இல்லாத நிலையில், திடீரென நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டது பலருக்கும் இன்ப அதிர்ச்சியளித்தது.

கேரள சர்வதேசப் பட விழாவில் பாவனா

கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் ஷாஜி செரியன் பேசும்போது, பாவானாவை கேரளாவின் ரோல் மாடல் என்று தெரிவித்தார். இந்நிலையில் பாவனா கலந்துகொண்டதை சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்திருந்தனர். அதற்குக் கேரள கலாசித்திர அகாடமியின் தலைவர் ரஞ்சித் பதிலளித்துள்ளார்.

அவர் கூறும்போது, “ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க விரும்பாததால், பாவனாவின் வருகையை நாங்கள் ரகசியமாக வைக்க முடிவு செய்தோம். அவரை விழாவுக்கு அழைக்கு முடிவை நானே எடுத்தேன். பின்னர் துறையினருடன் ஆலோசித்த பின், முதலமைச்சருக்குத் தகவல் தெரிவித்தேன். சமூகவலைதளங்களில் வரும் விமர்சனங்களை நான் கவனிப்பதில்லை.

எதிர்மறையான விஷயங்களைப் பரப்புவது ஒருவித மனநோய். அதை வைத்து யாரும் என்னைப் பயமுறுத்த முடியாது. தேவையற்ற கருத்துக்களால் நான் ஆத்திரப்படமாட்டேன். நான் நினைப்பதைச் செய்வேன். கலாச்சார விவகாரங்கள் துறை மற்றும் அரசு ஆதரவு எனக்கு இருக்கிறது” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT