சினிமா

`மாநாடு’ தெலுங்கு ரீமேக்கில் ஹீரோ திடீர் மாற்றம்!

காமதேனு

’மாநாடு’ படத்தின் தெலுங்கில் நடிப்பதாக இருந்த ஹீரோ, திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த படம் 'மாநாடு'. டைம் லூப் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகரன், பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடித்திருந்தனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. நூறு கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. இந்தப் படத்தின் மற்ற மொழிகளுக்கான ரீமேக் உரிமையை, பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் நடிகர் ராணாவின் தந்தையுமான சுரேஷ் பாபு பெற்றிருந்தார். தனது சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் மூலம் இந்தப் படத்தை ரீமேக் செய்வதாக அவர் அறிவித்திருந்தார்.

இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில், நடிகர் நாக சைதன்யா சிம்பு கேரக்டரிலும், பூஜா ஹெக்டே, கல்யாணி பிரியதர்ஷன் வேடத்திலும் நடிப்பதாகவும் வெங்கட் பிரபுவே தெலுங்கு ரீமேக்கையும் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில் ராணா டக்குபதி நடிக்க இருக்கிறார். தற்போது நாக சைதன்யா நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. அந்தப் படத்தை முடித்தபின் ராணா நடிப்பில் மாநாடு ரீமேக்கை அவர் இயக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT