சினிமா

‘கடவுளே என் காலில் விழுந்ததைப் போல உணர்ந்தேன்'- ராகவா லாரன்ஸ் உருக்கம்!

காமதேனு

“குழந்தைகள் முன்பு எந்த அப்பாவும் ஹீரோவாகவே இருக்க விரும்புவார்கள். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று நம்புகிறவன் நான். குழந்தைகள் என் காலில் விழும்போது, கடவுளே என் காலில் விழுவது போல உணர்ந்தேன். அதனால் நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்களின் காலில் விழுந்து வணங்குவேன்“ என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இனி நான் யாருக்கு உதவி செய்தாலும், அவர்கள் என் காலில் விழக்கூடாது எனக் கருதுகிறேன். அவர்களின் காலில் நான் விழுந்துதான் என் சேவையைச் செய்வேன். நீண்ட நாட்களாக எனக்குள் இந்த ஒரு சிறு மாற்றத்தைக் கொண்டுவரக் காத்திருந்தேன். இன்று அதற்கான முதல் அடி எடுத்து வைக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

மேலும், ‘பொதுவாகவே ஏழைகள் பணக்காரர்களின் காலில் விழுந்து உதவி கேட்பதை நான் எப்போதும் பார்த்திருக்கிறேன். அந்தப் பணக்காரர்கள் தங்களுக்கு உதவி செய்த பிறகும் அவர்கள் மீண்டும் அவ்வாறே செய்கிறார்கள். இது போன்ற சில சம்பவங்களால் மட்டும் நான் தனிப்பட்ட முறையில் அதைப் பார்க்க விரும்பவில்லை. என் வாழ்வில் நடந்த சில சம்பவங்களும் இதற்குக் காரணம். அவற்றை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ஒரு குடும்பத்தினர் தங்கள் குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக உதவி கேட்டு என்னிடம் வரும்போது என் கால்களில் விழ வந்தனர். நான் விலகிச் சென்று, உதவி தேவைப்படும் அந்தக் குழந்தையைப் பார்த்தேன். அந்த குழந்தை தனது பெற்றோர் என் காலில் விழுந்தவுடன் அழத் தொடங்குகிறது. பெற்றோர்கள் பிள்ளைகளுக்காகப் படும் வேதனைகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால் குழந்தைகள் முன்பு எந்த அப்பாவும் ஹீரோவாகவே இருக்க விரும்புவார்கள். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று நம்புகிறவன் நான். அதனால் கடவுள் என் காலில் விழுவது போல் அப்போது உணர்ந்தேன். சில சமயங்களில் நான் கிராமங்களுக்குச் சென்று என் தாயின் வயதில் உள்ள முதியவர்களுக்கு உதவி செய்யும் போது அவர்களும் அதையே செய்கிறார்கள். அவர்கள்தான் எனக்குப் புண்ணியம் வழங்குகிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்களின் காலில்தான் நான் விழுந்து அவர்களின் ஆசிகளைப் பெறுவேன். எனது சிறிய ஈகோவும் மறைந்து போனது’ என அந்தப் பதிவில் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT