சினிமா

ஆர்.வி.உதயகுமார்: மண்மணக்கும் திரைமொழியில் பேசியவர்!

வி.ராம்ஜி

அந்தக் காலத்தில் படத்துக்கு கதையை ஒருவர் எழுதுவார். திரைக்கதையை ஒருவர் அமைப்பார். வசனத்தைப் பிரபலமானவர் எழுதுவார். இயக்குநர் இயக்கத்தில் மட்டும் ஈடுபடுவார். பிறகு ஏ.பி.நாகராஜன், இயக்குநர் ஸ்ரீதர், பாலசந்தர், பாக்யராஜ், விசு முதலான பலரும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனும் பணிகளைச் செய்தார்கள். டி.ராஜேந்தர், கூடுதலாகப் பாடலையும் எழுதினார். இசையமைத்தார். ஒளிப்பதிவும் செய்தார். ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ என்பதுடன் பாடல்களிலும் முத்திரைப் பதித்த அருமையானதொரு இயக்குநர் என்று பேசப்பட்டவர் ஆர்.வி.உதயகுமார்.

கொங்கு தேசம்தான் பூர்விகம். சொந்த ஊர் மேட்டுப்பாளையம். பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு என சமர்த்துப் பிள்ளையாகப் படித்து பட்டம் வாங்கினார். படிப்பில் கெட்டி என்று ஊரில் பேரெடுத்தார். கல்லூரியை முடிக்கும் போதுதான், அவருக்குள் இருக்கும் சினிமா மீதான ஆசை, பட்டவர்த்தனமாக பளீரெனத் தெரிந்தது வெளியே! சென்னை திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் பிரிவில் சேர்ந்தார். கற்றறிந்தார். டிப்ளோமா பெற்றார். திரைப்படக் கல்லூரியில் கற்றுக்கொண்டது ஒருபக்கம் என்றால், சிறுவயதில் இருந்தே படங்களைப் பார்த்துப் பார்த்து வளர்ந்தது இன்னொரு பக்கம் இவரைப் பட்டைத் தீட்டி வைத்திருந்தது.

இன்றைக்கு குறும்படங்கள் என்பது எல்லோரும் சொல்கிற, எல்லோருக்கும் புரிகிற விஷயமாகிவிட்டன. ஆனால் அன்றைக்கே குறும்படங்களை எடுத்துக் கலக்கினார். பார்த்தவர்கள் எல்லோரும் பாராட்டினார்கள். ‘’கதை சொல்ற ஸ்டைலே புதுசா இருக்கு’’ என்று ஊக்கப்படுத்தினார்கள்.

எடிட்டர் எம்.வெள்ளைச்சாமி என்பவர் எண்பதுகளில் மிகப்பிரபலம். 1982-ல் அவர் இயக்கிய ‘நேரம் வந்தாச்சு’ படத்தில் உதவி இயக்குநராக உதயகுமார் பணிபுரிந்தார். அதேபோல், திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கே பெருமை தேடித்தந்த படம் என்று இன்றைக்கும் கொண்டாடப்படும் ‘ஊமை விழிகள்’ எனும் திரைப்படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பிறகு, பாடலாசிரியர் நேதாஜி இயக்கிய ‘ஜனனி’ எனும் படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்தார்.

சினிமாவில் ஒரு இயக்குநராக எல்லோரையும் எப்படியெல்லாம் வேலை வாங்க வேண்டும், மிகப்பெரிய கூட்டத்தை எப்படிச் சமாளிக்க வேண்டும், இருளில் எப்படி படமாக்க வேண்டும், வெளிச்சத்தில் எப்படி நடிகர்களுக்கு குளோஸப் வைக்க வேண்டும் என்பதையெல்லாம் நுணுக்கி நுணுக்கிக் கற்றறிந்த ஆர்.வி.உதயகுமார், தனது முதல் படத்திலேயே பிரபுவையும் கார்த்திக்கை நடிக்கவைத்தார். ‘உரிமை கீதம்’ எனும் தலைப்பில் 1988 பிப்ரவரி 26-ல் அப்படம் வெளியானது. மணிரத்னம், பிரபுவையும் கார்த்திக்கையும் இணைந்து நடிக்கவைத்த ‘அக்கினி நட்சத்திரம்’ 1988 ஏப்ரல் 15-ம் தேதி வெளியானது.

இதையடுத்து, சத்யா மூவிஸ் தயாரிப்பில் சிவாஜி கணேசன் முதன்முதலாக நடித்த ‘புதிய வானம்’ படத்தை இயக்கினார். சத்யராஜும் சிவாஜியும் இணைந்து நடித்தார்கள். மிகப்பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படம் இது. மிகவும் பிரபலமான ஒளிப்பதிவாளர் ரவி யாதவை இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினார் ஆர்.வி. உதயகுமார்.

இதன் பின்னர், மீண்டும் பிரபுவை வைத்து சிவகுமாரையும் இணைத்துக்கொண்டு, ‘உறுதிமொழி’ என்ற திரைப்படத்தை எடுத்தார். இதையடுத்து 1990-ம் ஆண்டு மீண்டும் கார்த்திக்கை நாயகனாக்கினார். ரேவதியையும் குஷ்புவையும் நாயகியராக்கினார். ‘கிழக்கு வாசல்’ கொடுத்தார். அதுவரை தான் எடுத்துக்கொண்டிருந்த பாணியில் இருந்து முழுவதுமாக விலகி, அட்டகாசமான கிராமத்துக் கதையை அழகாகக் கொடுத்தார். கார்த்திக்கின் திரை வாழ்வில் ‘கிழக்கு வாசல்’ மிக முக்கியமான படமாக இன்றைக்கும் பேசப்படுகிறது. அதேபோல், விஜயகுமாருக்கு இது ‘லைஃப்டைம் கேரக்டர்’ படமாக அமைந்தது. ஒருபக்கம் ரேவதியின் நடிப்பும் அசத்தலாக இருக்கும். இன்னொரு பக்கம் குஷ்புவையும் ரசிக்கவைத்திருப்பார். இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

திருச்சி மாரீஸ் ராக்கில் படம் வெளியாகி, முதல் நாள், முதல் ஷோ பார்த்தாகிவிட்டது. அதன் பின்னர் நான்கு நாள் கழித்துப் போனால், ‘ஹவுஸ்ஃபுல்’. டிக்கெட் கிடைக்கவில்லை. அடுத்த வாரத்தில் ஒருநாள் சென்றால், ‘ஹவுஸ்ஃபுல்’. டிக்கெட் காலி. 70 நாட்களுக்குப் பிறகு, தியேட்டரில் டிக்கெட் கொடுப்பதற்கு ஒருமணி நேரம் முன்னதாக க்யூவில் நின்று இரண்டாவது முறை பார்த்ததெல்லாம் நினைவுக்கு வருகின்றன.

200 நாட்களைக் கடந்து ஓடியது இந்தப் படம். அடுத்த படத்தில் மீண்டும் கார்த்திக் நாயகன். இந்த முறை செளந்தர்யா நாயகி. ‘பொன்னுமணி’ படத்தின் பாடல்களும் இளையராஜாவின் இசையும் இன்றைக்கும் நம் செவிகளில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கின்றன. பாடல்கள் அனைத்துமே ஆர்.வி.உதயகுமார்தான் எழுதி அசத்தினார்.

அதன் பின்னரும் கார்த்திக்கை வைத்து ‘நந்தவனத்தேரு’ எடுத்தார். இளையராஜா இசையில் எல்லாப் பாடல்களும் பாடல் வரிகளும் ரசிகர்களுக்கு மனப்பாடம். நடுவே, ஆனந்தி பிலிம்ஸுக்காக, விஜயகாந்தை அப்படியே உருமாற்றி ‘சின்னக்கவுண்டர்’ எடுத்தார். சுகன்யாவின் நடிப்பை வெளிக்கொண்டு வந்தார். சலீம் கெளஸின் சிறந்த நடிப்புத்திறனுக்கு எடுத்துக்காட்டாக இந்தப் படத்தையும் சொல்லலாம். மனோரமாவின் நடிப்பு பிரமாதமாக இருக்கும். கவுண்டமணி, செந்தில், வடிவேலு முதலானோரைக் கொண்டு காமெடியில் அதகளம் பண்ணியிருப்பார். இந்தப் படம் அடைந்த வெற்றிக்கு எல்லையே இல்லை. வெள்ளிவிழாவையும் கடந்து சாதனை படைத்தது.

ஆர்.வி.உதயகுமார் மார்க்கெட் வேல்யூ இயக்குநராக ஜொலித்த காலம் அது. இளையராஜா அழைத்தார். படம் தயாரித்தார். ஆர்.வி.உதயகுமார்தான் இயக்கினார். கமல்ஹாசன் நாயகன். கமலையும் குஷ்புவையும் வைத்துக்கொண்டு கலகலவென, ஜாலியாக, ‘சிங்காரவேலன்’ பண்ணினார். இதுவும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. இளையராஜாவே அழைத்து படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது போலவே, ஏவி.எம் நிறுவனம் அழைத்தது.

ரஜினியின் கால்ஷீட்டையும் வாங்கி வைத்திருந்தார்கள். ரஜினிக்காக, ஏவி.எம் நிறுவனத்துக்காக ‘எஜமான்’ செய்தார். ரஜினியை வேறொருவிதமாகக் காட்டினார். ரஜினியின் பண்பட்ட நடிப்புத் திறமையை அழகுற வெளிக்கொண்டு வந்தார். இவரின் பாடல் வரிகளுக்கு இளையராஜா ரசிகராகவே மாறினார்.

சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் ஆர்.வி.உதயகுமாரை அழைத்தது. இளைய திலகம் பிரபுவின் 100-வது படமான ‘ராஜகுமாரன்’ படத்தை இயக்கினார். இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களையும் மயிலிறகு வரிகளால் நமக்கு இதம் தரும் பாடல்களாக்கினார். இயக்குநர்கள் பி.வாசு, செய்யாறு ரவி, கே.எஸ்.ரவிகுமார் முதலானோரின் படங்களுக்கும் பாடல்கள் எழுதினார் ஆர்.வி.உதயகுமார்.

‘சின்ன கவுண்டர்’ படமும் கிராமத்துப் படம். ‘சிங்காரவேலன்’ படமும் பாதி கிராமத்துப் படம். ‘எஜமான்’ கிராமத்துப் படம்தான். ‘ராஜகுமாரன்’ கிராமத்துப்படம்தான். ‘கிழக்கு வாசல்’, ‘பொன்னுமணி’ கூட கிராமத்து சப்ஜெக்ட்டுகள்தான்.

ஆனால். கதைகளிலும் கதைக்களன்களிலும் வித்தியாசங்களைக் காட்டிக்கொண்டே வந்தார். அவரின் வசனங்களும் வித்தியாசமானவை. இயல்பான வார்த்தைகளைக் கொண்டு கதாபாத்திரங்களுக்குத் தக்கபடி எழுதுவதில் வல்லவர்.

இன்றைக்குப் பல படங்களில் நடித்தும் வருகிறார் ஆர்.வி.உதயகுமார். 80-களின் இறுதியிலும் 90-களிலும் மிகப்பெரிய வெற்றிப்பட இயக்குநர் எனும் முத்திரையுடன் பீடுநடை போட்டு உலா வந்த உதயகுமாருக்கு இன்று (நவம்பர் 9) பிறந்தநாள்.

விஜயகாந்தை சின்ன கவுண்டராக்கி, கமல்ஹாசனை சிங்காரவேலனாக்கி, ரஜினியை எஜமானாக்கி, பிரபுவை ராஜகுமாரனாக்கிய ஆர்.வி.உதயகுமாரை வாழ்த்துவோம்!

SCROLL FOR NEXT