நடிகர் திலீப்
நடிகர் திலீப் 
சினிமா

திலீப்பின் ஐபோனை சரி செய்தவர் உயிரிழப்பு: மறு விசாரணை கோரி புகார்

காமதேனு

நடிகர் திலீப் செல்போனை சரி செய்தவர் உயிரிழந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி, போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகை கடத்தல் விவகாரத்தில், விசாரணை அதிகாரியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பின் நண்பரும் இயக்குநருமான பாலசந்திரகுமார் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகை தாக்கப்பட்ட வீடியோவை நடிகர் திலீப் பார்த்தார் என்றும் விசாரணை அதிகாரியை கொல்ல சதித்திட்டம் தீட்டினார் என்றும் அவர் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அவர் கேட்டுள்ள முன்ஜாமீன் மனு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் திலீப்

இந்நிலையில், நடிகர் திலீப்பின் ஐபோனை சரிசெய்த, திருச்சூரைச் சேர்ந்த ஐடி நிபுணரும் குறும்பட இயக்குநருமான சலீஷ் என்பவர், கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவர் காரில் செல்லும்போது எதிரில் வேகமாக வந்த வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக, திருப்பியபோது, சாலை தடுப்பில் மோதி அவர் கார் விபத்தில் சிக்கியது. இதில் சலீஷ் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் திலீப்பின் ஐபோனை, சலீஷ் சரி செய்துகொடுத்த மறுநாள் நடந்துள்ளது. இதை விபத்து என்று கூறி போலீஸார் வழக்கை முடித்துவிட்டனர். இந்நிலையில், இப்போது திலீப் மீது விசாரணை அதிகாரியை கொல்ல சதி திட்டம் தீட்டினார் என்று புகார் கூறப்பட்டுள்ளதால், சலீஷின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், இதுகுறித்து மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சலீஷின் உறவினர்கள், அங்கமாலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அதில், திலீப்புக்கு அவரை நன்றாகத் தெரியும் என்றும் அவருடைய ஐபோனை சரி செய்து கொடுத்த மறுநாளே சலீஷ் உயிரிழந்திருப்பதால் சந்தேகம் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT