சினிமா

தமிழ் சினிமாவில் புதிய மைல்கல் - ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

காமதேனு

தமிழ் சினிமாவில் அதிகம் வசூலித்தப் படங்களின் பட்டியலில் முன்னணி இடத்தை நோக்கி ‘பொன்னியின் செல்வன்’ சென்றுள்ளது.

கல்கி எழுதிய நாவலைத் தழுவி, மணிரத்னம் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. உலகம் முழுவதுமே இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் வெளியாகி 13 நாட்கள் ஆன நிலையில், படத்தின் வசூல் ரூ.400 கோடியை தாண்டியுள்ளது என்று லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் அதன் முதல் வாரத்தில் ரூ.308 கோடி வசூல் செய்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது வாரத்தின் முதல் நாளில் 15.47 கோடி ரூபாயும், 2ம் நாளில் 26.72 கோடி ரூபாயும், 3வது நாளில் 28.35 கோடி ரூபாயும், 4வது நாளில் 12.29 கோடி ரூபாயும், 5 வது நாளில் 10.61 கோடி ரூபாயும் என மொத்தம் இது வரை ரூ. 402 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது எனவும், இதன் மூலமாக கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தின் சாதனையை இப்படம் முறியடித்துள்ளது எனவும் வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே தமிழ் சினிமாவில் ரஜினியின் ‘2.0’, ‘கபாலி’ ஆகிய படங்களும், கமலின் ‘விக்ரம்’ படமும் 400 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது. இப்போது அந்தப் பட்டியலில் ‘பொன்னியின் செல்வனும்’ இணைந்துள்ளது.

SCROLL FOR NEXT