’பராசக்தி’, ‘நவராத்திரி’, ‘திரிசூலம்’
’பராசக்தி’, ‘நவராத்திரி’, ‘திரிசூலம்’  
சினிமா

படத்தலைப்புகளுக்கும் நடிகர் திலகத்துக்கும் இப்படியொரு ஒற்றுமையா?

வி.ராம்ஜி

நடிகர்திலகம் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் மறக்கவே முடியாத சாதனை நாயகன். தென்னிந்தியாவின் நடிப்புப் பல்கலைக்கழகம். ‘’என்னதான் இருந்தாலும் உங்கள் அளவுக்கு என்னால் நடிக்க முடியாது’’ என்று மார்லன் பிராண்டோவே சிவாஜியின் நடிப்பைப் பார்த்து வியந்தார். தமிழ் சினிமாவில், ஒரு நடிகர் 200-வது படத்தையும் கடந்து ஹீரோவாக நடித்தார் என்ற பெருமையை முதன்முதலாக அடைந்தவரும் சிவாஜி கணேசன் தான்!

இயக்குநர் ஷங்கரின் ‘சிவாஜி’ படத்தில், ரஜினி ஓரிடத்தில், ‘’பராசக்தி ஹீரோடா. பேரைக் கேட்டதும் சும்மா அதிருதுல்ல...’’ என்று வசனம் பேசியிருப்பார். உண்மையில், சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’ வந்ததை அடுத்து, தமிழ் சினிமா மொத்தமும் சிவாஜியைக் கொண்டாடியது. வரிசையாக தங்கள் படங்களுக்கு தயாரிப்பாளர்களும், இயக்குநர்களுக்கும் அவரை ஒப்பந்தம் செய்தார்கள்.

‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்’ நாடகத்தைப் பார்த்துவிட்டு, விழாவில் பேசிய தந்தை பெரியார், ‘’இந்த நாடகத்தில் வீர சிவாஜியை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டான் இந்தப் பையன். இனி இவன், வி.சி.கணேசன் இல்லை... சிவாஜி கணேசன்’’ என்றார். அந்தளவுக்கு நடிப்பாலேயே, தனக்கொரு அடைமொழியை அமைத்துக்கொண்ட மகா கலைஞன் சிவாஜி கணேசன்.

’பராசக்தி’யில்...
நவராத்திரி திரைப்படத்தில்...

1952-ம் ஆண்டு கருணாநிதியின் வசனத்தில் அனல் பறந்த ‘பராசக்தி’ வெளியாகி, மிகப்பெரிய மறுமலர்ச்சியையும் புரட்சியையும் ஏற்படுத்தியது. கிருஷ்ணன் - பஞ்சு இயக்கினார்கள். பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. தமிழ்த் திரையுலகில், நடித்த முதல் படத்திலேயே அந்தக் காலத்திலேயே பேரும்புகழும் வாங்கியவர் எனும் பெருமையும் சிவாஜிக்குக் கிடைத்தது. அம்மன் மீது அதீத பக்தி கொண்ட மன்னன் சத்திரபதி வீர சிவாஜியின் பெயரை, அதற்கு அப்பால் வேறொரு திசையில் பயணித்த தந்தை பெரியார், ‘சிவாஜி’ என நடிகர் திலகத்துக்குச் சூட்டினார். அதேபோல், நாத்திக வசனங்களை பேசிய ‘பராசக்தி’ எனும் அம்மன் பெயரைத் தலைப்பாகத் தாங்கிவந்த படம், சிவாஜியின் முதல் படமாக அமைந்தது.

சத்ரபதி வீர சிவாஜி

பராசக்திக்குப் பிறகு சிவாஜிக்கு மளமளவென படங்கள் வந்தன. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமாக அவர் நடிப்பின் பிரம்மாண்டத்தை நமக்கு உணர்த்தின. 1964-ம் ஆண்டு, இயக்குநர் ஏ.பி.நாகராஜன் தயாரிப்பிலும் இயக்கத்திலும் சிவாஜியின் 100-வது படம் வெளியானது. சிவாஜியும் சாவித்திரியும் நடித்த இந்தப் படம் தமிழ் சினிமாவில் முக்கியமான படம். இந்தப் படம் வெளிவரும் வரை, வேறு எந்த நடிகரும், தமிழில் 100 படங்கள் நடித்ததில்லை. அதேபோல், ஒன்பது வேடங்களில் நடித்து பிரமிக்க வைத்தார் நடிகர்திலகம். முதல் படம், ‘பராசக்தி’ என்றால், 100-வது படம் ‘நவராத்திரி’. ‘’சிவனுக்கு ஒரு ராத்திரி, சிவராத்திரி. அம்பிகைக்கு ஒன்பது ராத்திரி. அவை நவராத்திரி’’ என்பார்கள். ஆக, முதல் படம் போலவே, 100-வது படமும் அம்பிகையை, பெண் தெய்வத்தைச் சொல்லுகிற படத்தலைப்பாக, பெண் தெய்வத்தின் விழாவைச் சொல்லுகிற தலைப்பாக அமைந்தது.

1952-ல் ‘பராசக்தி’ வெளியானது. 12 வருடங்களுக்குள் 1964-ல், 100-வது படமான ‘நவராத்திரி’ வெளியானது. இதையடுத்து, 1979-ல், சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், கே.விஜயன் இயக்கத்தில், கே.ஆர்.விஜயா, ஸ்ரீப்ரியா, ரீனா முதலானோர் நடிக்க, சிவாஜியின் ‘திரிசூலம்’ வெளியானது. ‘பலே பாண்டியா’, ‘தெய்வமகன்’ படங்களுக்குப் பிறகு சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில், நடித்த இந்தப் படம்தான் சிவாஜியின் 200-வது படம்.

கமலும் ரஜினியும் வளர்ந்துகொண்டிருந்த காலகட்டம் இது. எம்ஜிஆர் - சிவாஜி என்றிருந்த காலம் எம்ஜிஆர் ஆட்சி அமைத்தார். அடுத்த தலைமுறை நடிகர்களாக கமலும் ரஜினியும் வந்தார்கள். வளர்ந்தார்கள். அந்த சமயத்தில் தனது 200-வது படத்தை வெளியிட்ட சிவாஜி, மிகப்பெரிய வெற்றியையும் பெற்றார். அதுவரை, தமிழ் சினிமாவில் வேறு எந்த நாயகனும், 200 படங்களில் நடித்ததில்லை.

’திரிசூலம்’ படத்தில்...

மெல்லிசை மன்னரின் இசையில், கவியரசு கண்ணதாசனின் வரிகளில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. 200-வது படமான ‘திரிசூலம்’ 200 நாட்களைக் கடந்தும் பல தியேட்டர்களில் ஓடி சாதனை படைத்தது.

ஆக, ‘பராசக்தி’, ‘நவராத்திரி’, அம்பிகையின் கையில் உள்ள சூலாயுதத்தைக் குறிக்கும் விதமாக ‘திரிசூலம்’ என்றெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ, சிவாஜிக்கும் அம்பாளுக்குமான தொடர்பு, அந்த வீர சிவாஜிக்கு நிகழ்ந்தது போலவே நடிகர் திலகத்துக்கும் இயல்பாகவே அமைந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

அதேபோல், சிவாஜிக்கு பக்தி, கோயில் வழிபாடு முதலானவற்றில் ஈடுபாடு அதிகம். திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கும் தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கும் யானைகளை வழங்கிய சிவாஜி கணேசன், வீட்டு வாசலில் பிள்ளையார் கோயிலைத்தான் கட்டியிருக்கிறார். ஆனாலும் முதல் படம், நூறாவது படம், 200-வது படம் என்று அம்பிகையை ஏதோவொரு வகையில் உணர்த்தும் விதமாக நடிகர்திலகத்தின் படங்கள் அமைந்தது ஆச்சரியம்தான்!

SCROLL FOR NEXT