அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  இனி சினிமா தொடர்பாக யாரும் என்னைத் தொடர்பு கொள்ளாதீர்கள்: திட்டவட்டமாக அறிவித்த உதயநிதி
சினிமா

இனி சினிமா தொடர்பாக யாரும் என்னைத் தொடர்பு கொள்ளாதீர்கள்: திட்டவட்டமாக அறிவித்த உதயநிதி

காமதேனு

ரெட் ஜெயண்ட்டில் இருந்து வெளியே வந்துவிட்டேன். அதைப் பார்த்துக்கொள்வது அர்ஜுன் துரை, செண்பகமூர்த்திதான். இனி சினிமா தொடர்பாக யாரும் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம், ‘கண்ணை நம்பாதே’. ஆத்மிகா , பூமிகா , பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உட்பட பலர் நடித்துள்ளனர். மு.மாறன் இயக்கியுள்ள இந்தப் படம் மார்ச் 17-ம் தேதி வெளியாகிறது.

இப்படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில்," மாறன் இயக்கிய 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படம் பார்த்துட்டு, அதில் நடித்த அருள்நிதிக்கு ஃபோன் செய்து, ‘படம் நல்லாயிருக்கு’ என்றேன். பாண்டிராஜ் இயக்கிய ‘வம்சம்’ எனக்கு வந்த கதை. அதில் ரொம்ப மெனக்கெட வேண்டும் என்று இயக்குநர் சொன்னார். அதற்கு அருள்நிதி சரியாக இருப்பார் என்று நான்தான் அனுப்பி வைத்தேன்.

இப்போது, அருள்நிதி, இயக்குநர் மாறனை என்னிடம் அனுப்பி கதைக் கேட்கச் சொன்னார். அவர் முதலில் சொன்னது காதல் கதை. எனக்கு கிரைம் த்ரில்லரில் நடிக்க வேண்டும் என்று ஆசை. பிறகு அப்படியொரு கதையைச் சொன்னார். அதுதான் 'கண்ணை நம்பாதே'. இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் இரவில்தான் நடந்திருக்கிறது. இயக்குநர் மாறன் கடினமாக உழைத்திருக்கிறார்.

கொரோனாவால் படம் தாமதமாகிவிட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டது. ஷூட்டிங் தொடங்கும்போது நான் தீவிர அரசியலுக்கு வருவேனா என்பது தெரியாது. முதல் ஷெட்யூல் முடிந்ததும் எம்.பி.தேர்தல் பிரச்சாரம், அடுத்து இளைஞரணி செயலாளர், அப்புறம் சட்டமன்ற உறுப்பினர், இப்போது அமைச்சராகவே ஆகிவிட்டேன். நான் ஒரே பாடலில் பெரிதாகிவிட்டேன் என்று நினைத்துக் கொள்வார்கள்.

நான்கரை ஆண்டுகள் உழைத்துதான் அமைச்சரானேன். ரெட் ஜெயண்ட்டில் இருந்து வெளியே வந்துவிட்டேன். அதைப் பார்த்துக்கொள்வது அர்ஜுன் துரை, செண்பகமூர்த்திதான். இனி சினிமா தொடர்பாக யாரும் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம்" என்றார்.

SCROLL FOR NEXT