சினிமா

6 வருடங்களுக்கு முன்பே பதிவுத் திருமணமா?: அதிர்ச்சியைக் கிளப்பும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி

காமதேனு

ஆறு வருடங்களுக்கு முன்பாகவே நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடிக்கு பதிவு திருமணம் நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கும் சர்ச்சைகள் எழாமல் இல்லை.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடிகளுக்குத் திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தை பிறந்திருப்பதாகச் சமீபத்தில் வெளியான செய்தி தமிழகத்தில் பெரும் அதிர்வலையைக் கிளப்பியது. இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அந்த ஜோடிகளுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், "வாடகைத்தாய் விவகாரத்தில் தேவைப்பட்டால் நயன்தாரா - விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீதான புகார் குறித்து விசாரணை அறிக்கை வந்ததும், எந்த மாதிரியான விதிமுறை மீறல் மற்றும் முரண்பாடுகள் உள்ளன என்பதைக் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார்.

சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர், சென்னை ஆணையர் அலுவலகத்தில் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ்சிவன் தம்பதி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்திருந்தார். அதில், “விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த 2022 ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், அக்டோபர் மாதம் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் தம்பதியர் அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் வகுத்துள்ள சட்ட விதிகளுக்குப் புறம்பாகச் செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி குழந்தை பெற்றிருப்பது தவறான முன்னுதாரணம். இது ஏற்புடையதல்ல. இது சமூக சீர்கேட்டை ஊக்குவிக்கும் செயல்.“ எனவும் புகாரில் கூறியுள்ளார்.

இந்நிலையில், விக்னேஷ் சிவன்-நயன்தாரா குழந்தைகள் விவகாரத்தை விசாரிக்க மருத்துவத் துறை சேவைகள் துணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு விசாரணையைத் தொடங்கியது. 6 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் பதிவு திருமணம் செய்ததற்கும், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் ஒப்பந்தப் பதிவு செய்ததற்கான ஆதாரங்களையும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தரப்பினர் சமர்ப்பித்ததாகத் தகவல் கசிந்துள்ளது. இந்த சான்றிதழ்கள் உண்மையா எனவும் போலியான சான்றிதழா எனவும் அதிகாரிகள் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT