சினிமா

ஆடு, மாடு மேய்த்த விவசாயி... இன்று தேசிய விருதுக்கு சொந்தக்காரர்: ஆனால் கண்கலங்குகிறார் நஞ்சியம்மா

என்.சுவாமிநாதன்

கேரள மாநிலம், அட்டப்பாடியைச் சேர்ந்த பழங்குடி பெண்ணான நஞ்சம்மாவுக்கு சிறந்த பெண் பாடகிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. `அய்யப்பனும் கோஷியும்' படத்தில் பாடியதற்காக இந்த விருதினைப் பெற்றுள்ளார் நஞ்சம்மா. ஆடு, மாடு வளர்த்து வாழ்வை ஓட்டிவரும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாட்டி நஞ்சம்மாவுக்கு இந்த விருது கிடைத்திருப்பதை இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.

மலையாளத்தில் சச்சி என்னும் சச்சிதானந்தன் இயக்கத்தில் வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிபெற்றது. இந்தப்படத்தை இயக்கிய சச்சி கடந்த 2020-ம் ஆண்டு, ஜூன் மாதம் இதய நோயினால் உயிர் இழந்தார். இந்நிலையில் அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதில் சிறந்த பின்னணி பாடகிக்கான விருது இப்படத்தில் இடம்பெற்ற “களக்காத்தா சந்தனமேரா” என்னும் பாடலை பாடிய நஞ்சம்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நஞ்சம்மா சினிமா பின்னணிப் பாடகித் தொழிலை, தொழில்முறையாக மேற்கொள்பவர் இல்லை. அதேநேரத்தில் விவசாயப் பணியின் ஊடே தனக்குத் தெரிந்த மொழியில் பாடல் பாடி ரசனையோடு வாழ்பவர். கேரளத்தின் பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடியைச் சேர்ந்த நஞ்சியம்மா பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்தவர். இவர் ஆடு, மாடு வளர்த்துவரும் விவசாயி ஆவார். இவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் நிர்வகிக்கும், ஆஸாத் கலாசங்கத்தில் அங்கத்தினராக உள்ளார்.

வெள்ளித்திரையில் தன் முதல் பாடலிலேயே தேசிய விருது பெற்றுவிட்டார் நஞ்சியம்மா. இதுபற்றி நஞ்சியம்மா கூறுகையில், “என் பாடல் மறைந்த இயக்குனர் சச்சிக்கு பிடித்துவிட்டது. அவர் சினிமாவில் பாடக் கேட்டார். ஆனால் எனக்குப் பழக்கம் இல்லை என மறுத்தேன். அவர்தான் தைரியம் ஊட்டி என்னை வெளி உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தார். ஆனால் இந்த சந்தோச தருணத்தைக் கொண்டாட சச்சிசார் இல்லை. அது எனக்கு வருத்தமாக இருக்கிறது. இப்போது சினிமாவில் நிறைய வாய்ப்பு வருகிறது. இப்படி எளிய மக்கள் பலருக்கும் விருது கிடைக்கட்டும்!” என்கிறார்.

இதேபோல் சிறந்த இயக்குநருக்கான விருதும், இதேபடத்தை இயக்கிய மறைந்த சச்சிக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT