சினிமா

கரகோஷத்தால் அதிர்ந்த அரங்கம்: சிரித்த முகத்துடன் தேசிய விருதை வாங்கினார் நஞ்சம்மா!

காமதேனு

சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை கேரளாவை சேர்ந்த நஞ்சம்மா குயடிரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். அப்போது, அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். இதனால் அரங்கமே அதிர்ந்தது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடியில் உள்ள நாக்குபதி பிரிவு எனும் பகுதியில் மகள், மகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோரோடு வசித்து வரும் நஞ்சம்மா, கால்நடை வளர்ப்பின் மூலம் குடும்பத்தை நடத்தி வருகிறார். மலையாளத்தில் வெளிவந்த 'அய்யப்பனும் கோஷியும்' என்ற படத்தில் இரண்டு பாடல்களை பாடியதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் நஞ்சம்மா. இதில் அவர் பாடிய ‘களக்காத்தா சந்தனமரம் வேகு வேகா பூத்திருக்கா’ என்ற பாடல் மிகப்பிரலமானது. இவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் நிர்வகிக்கும், ஆஸாத் கலாசங்கத்தில் அங்கத்தினராக உள்ளார்.

இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கான 68-வது தேசிய விருது அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் மலையாளத்தில் வெளிவந்த `அய்யப்பனும் கோஷியம்' பட இயக்குநர் சாச்சிக்கும், சிறந்த துணை நடிகராக அதில் நடித்த பிஜூ மேனனுக்கும், பின்னணி பாடகி விருது நஞ்சம்மாவுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை நஞ்சம்மாவுக்கு குடியரசுத் தலைவர் இன்று வழங்கினார். அப்போது, அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று நஞ்சம்மாவை கரகோஷம் எழுப்பி வாழ்த்தினர். அரங்கமே அதிர்ந்த சந்தோஷத்தில் சிரித்துக் கொண்டே விருது வாங்கினார் நஞ்சம்மா.

SCROLL FOR NEXT