அனுமோகன்
அனுமோகன் 
சினிமா

ரஜினியிடம் ‘பாம்புப்பிடி’ கேள்வி கேட்ட பன்முகக் கலைஞன் அனுமோகன்!

வி.ராம்ஜி

எம்ஜிஆர், சிவாஜி காலத்தில், நடிகராகவேண்டும் என்ற கனவுடன் சொந்த ஊரில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்தவர்கள் அதிகம். கே.பாலசந்தரும், பாரதிராஜாவும் வந்த பிறகு, இயக்குநராக வேண்டும் என்கிற லட்சியத்துடன் சென்னைக்கு வந்து இறங்கினார்கள். ஆனால், காலம் எதையும், எவரையும் பார்த்துக்கொண்டிருப்பதில்லை. நடிகர்களை இயக்குநராக்கும். இயக்குநர்களை நடிகராக்கி அழகு பார்க்கும்.

அன்றைக்கு பாரதிராஜா இயக்குநர். இன்றைக்கு மிகச்சிறந்த நடிகராகவும் மிளிர்கிறார். எஸ்.ஜே.சூர்யா அற்புதமான இயக்குநர். இன்றைக்கு ஓடிடி தளத்தில் வந்திருக்கும் ‘வதந்தி’ வெப் சீரிஸின் நாயகன். வெற்றிப்படங்களை வரிசையாகக் கொடுத்த மணிவண்ணன் எனும் மகத்தான கலைஞனையும் வெள்ளிவிழாப் படங்கள் கொடுத்த ஆர்.சுந்தர்ராஜன் எனும் நடிகைரையும் மனோபாலா எனும் கலகல காமெடி நாயகனையும் நாம் மறக்கவே இல்லை. இப்படித்தான் ‘நான் டைரக்டராகப் போறேன்’ என்று சொல்லிவிட்டு, பையைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு கோடம்பாக்கத்தில் இறங்கி, இயக்குநராக ஜெயித்த அனுமோகன், நடிப்பிலும் வெளுத்து வாங்கினார்.

கோவையில் இருந்து பாக்யராஜ் வந்தார். இயக்குநரானார். வரும் போதே நடிக்கவும் தொடங்கிவிட்டார். அடுத்து பாரதிராஜாவின் பட்டறைக்குள் நுழைந்து மணிவண்ணன் இயக்குநரானார். அவர் மூலமாகவே ‘கொடி பறக்குது’ மூலம் நடிகராகவும் உயர்த்தப்பட்டார். பாக்யராஜின் பள்ளித் தோழனான ஆர்.சுந்தர்ராஜன், எவரிடமும் உதவி இயக்குநராகச் சேராமல், அவராகவே சென்னைக்கு வந்து, முட்டி மோதி படங்களை இயக்கினார். வெள்ளிவிழாப் படங்களை அசால்ட்டாகக் கொடுத்தார். இப்படி வந்த கோவைக்காரர்களில், அனுமோகனும் ஒருவர்.

பள்ளியில் நடைபெற்றது படப்பிடிப்பு. அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த மோகனுக்கு இருந்த வியப்பு ஒன்றே ஒன்றுதான்... “அதோ... அந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டும், அங்கே இங்கே போய்க்கொண்டும் எல்லோரையும் வேலை வாங்குகிறவர் யார்?” என விசாரித்தார். அவர்தான் இயக்குநர்... டைரக்டர் என்று விவரித்தார்கள். “அப்படீன்னா, நாம் பெரியாளானதும் டைரக்டராகிவிடவேண்டியதுதான்” என்று அந்தப் பிஞ்சு வயதிலேயே முடிவெடுத்தார் அனுமோகன்.

இயக்குநரும் நடிகருமான அனுமோகன், இயல்பாகவே கலகலப்பு நிறைந்தவர். ஒருமுறை பேட்டிக்காக, அவரைத் தொடர்பு கொண்டேன். பேட்டி வேண்டும் என்றேன். மறுநாளே... மதியத்தில் நேரம் ஒதுக்கினார். நம் அலுவலகம் வந்தார். இரண்டு மணி நேரத்தை பேட்டிக்காக ஒதுக்கிக் கொடுத்தார்.

‘’கோவைலேருந்து நான்பாட்டுக்கு டைரக்டராகணும்னு வந்துட்டேன். அம்மாகிட்ட 27 ரூபாய் வாங்கிட்டு வண்டி ஏறினேன். 17 ரூபாய் டிக்கெட். அது போக, எங்கிட்ட இருந்தது பத்து ரூபாதான்! அந்த பத்து ரூபாயை வைச்சிக்கிட்டு, ஒரு மாசம் முழுசும் ஓட்டினேன். சில சமயம் டீ குடிப்பேன். சில சமயம் ரெண்டு இட்லி. பல சமயங்கள்ல எதுவுமே கிடையாது. என் நண்பர் சாமிராஜ்னு ஒருத்தர், ‘இங்கே தங்கிக்கோ’ன்னு இடம் கொடுத்தார். தினமும் ரெண்டு ரூபா வாடகை. அவரே கொடுத்துட்டார். பல நாள் சாப்பாடு வாங்கிக் குடுத்துருவார்.

வாழ்க்கைல அவரை நான் மறக்கவே இல்ல. இப்ப வரைக்கும் அவர் எனக்கு நண்பர். நண்பர் மட்டுமில்ல... என் குழந்தைகளுக்கு தாய்மாமாலாம் இல்ல. அவரை தாய்மாமா ஸ்தானத்துல வைச்சு, அவர் மடில குழந்தைகளை வைச்சு, குழந்தைகளுக்கு முடி இறக்கி, காது குத்தினேன். அப்படியான எல்லாக் கஷ்டத்தையும் தாண்டி, சினிமாவுக்குள்ளே வர்றதுக்கே, மிகப்பெரிய போராட்டமா ஓடிப்போச்சு, வாழ்க்கைல’’ என்று தான் கடந்து வந்த பாதையை, வலிகள் நிறைந்த பயணத்தை, சிரிக்கச் சிரிக்கச் சொன்னார் அனுமோகன்.

இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் எல்லோரும் நண்பர்கள்தான். ஊரில் நாடகம் போட்டு பேரெடுத்தவர்களில் அனுமோகனும் ஒருவர். ஒருகட்டத்தில், ‘வாங்க, எங்கிட்ட சேர்ந்துக்கங்க’ என்று திரையுலகிற்குள் அடியெடுத்து வைக்கக் காரணாமாக இருந்தவர் இயக்குநர் கே.பாக்யராஜ். அதையடுத்து, ஆர்.சுந்தர்ராஜனிடம் சென்று சேர்ந்தார்.

‘’ஆர்.சுந்தர்ராஜன், என் மேல அசைக்கமுடியாத நம்பிக்கை வைச்சார். சொல்லப்போனா, நான் எம்மேல வைச்ச நம்பிக்கையை விட, அவர் எம்மேல வைச்ச நம்பிக்கை அதிகம்னுதான் சொல்லுவேன். ‘இந்தக் காட்சியை நீயே எடு’ன்னுவார். ‘இந்த சீனுக்கு டயலாக் எழுது பாக்கலாம்’னு சொல்லுவார். ‘இந்த சீன்ல கேமரா எங்கேருந்து மூவாகணும்னு நினைக்கிறே’ன்னு கேப்பார். என்னை சுதந்திரமா கத்துக்கவும் செயல்படவும் அனுமதிச்சார். அவரோட பல வெள்ளிவிழாப் படங்கள்ல நான் ஒர்க் பண்ணினதெல்லாமே எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய பாடங்கள்’’ என்று நன்றி மறக்காமல் சொன்னார் அனுமோகன்.

இந்தக் காலகட்டத்தில் தனக்குள் மலர்ந்த காதலையும் சொன்னார் அனுமோகன். கோவையில், வீட்டுக்கு எதிர்வீட்டுப் பெண்ணைக் காதலித்தார். அந்தப் பெண்ணும் காதலித்தார். மாதம் ஒருமுறையோ இரண்டு மாதத்துக்கு ஒருமுறையோ... ஊருக்குச் சென்ற அனுமோகன், பிறகு வாரம் தவறாமல் ஊருக்குச் சென்றார். “நம்ம புள்ளைக்கு நம்மளைப் பாக்கணும்னு எவ்ளோ ஆசை பாருங்க’’ என்று அப்பாவும் அம்மாவும் நினைத்தார்கள். ஆனால் அனுமோகனோ, அவர் தன் காதலியைப் பார்க்கத்தான் வாரப் பயணம் மேற்கொண்டார் என்பது கடைசி வரை எவருக்கும் தெரியாத ரகசியம்.

ஒருபக்கம், உதவி டைரக்‌ஷன் பணி. இன்னொரு பக்கம், கதை எழுதும் வேலை. எப்படியாவது இயக்குநராகிவிட வேண்டும் எனும் வெறி. நடுவே, காதல். ‘’ஒன்பது வருடக் காதல் இது. அப்படியே வளர்ந்துகொண்டே இருந்தது. நான்தான் டைரக்டராக வளர்ந்ததும் திருமணம் என்று தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன்’’ என்றவருக்குள் ஏகப்பட்ட விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன.

“ ’16 வயதினிலே’ தயாரித்த எஸ்.ஏ.ராஜ்கண்ணு, கோவையில் வீட்டுத் தெருவில் தேங்காய் மண்டி வைத்திருந்தார். ‘நான் பாரதிராஜாகிட்ட சேர்த்துவிடுறேன்’னு சொன்னார். ஆனா, அப்போ எனக்கு மலேரியா ஜூரம் வந்துருச்சு. சேர முடியாமப் போச்சு. ‘நூறாவது நாள்’ படத் தயாரிப்பாளர் எஸ்.என்.திருமால், வலம்புரி சோமநாதனிடம் பிரதி எடுப்பவராக வேலைக்குச் சேர்த்துவிட்டார்.

கோகுலகிருஷ்ணாவிடம் அடுத்து வேலை பார்த்தேன். ஆனால், தொடர்ந்து ஆர்.சுந்தர்ராஜனிடம் வேலை பார்த்து வந்தேன். ‘கூட்ஸ் வண்டியிலே’ங்கற ‘குங்குமச்சிமிழ்’ பாட்டு முழுக்க என்னை எடுக்கறதுக்கு சுதந்திரம் கொடுத்து ஊக்கப்படுத்தினார்’’ என்றார் அனுமோகன்.

இந்த சமயத்தில், ‘இது ஒரு தொடர்கதை’ இயக்கும் வாய்ப்பு வாய்ப்பு ஆர்.சுந்தர்ராஜனுக்கு வந்தது. ஆனால், அவரால் படத்துக்கு தேதி கொடுக்கமுடியவில்லை. ‘இவன் எடுப்பான்’ என்று அனுமோகனைச் சொல்ல, இயக்குநரானார் அனுமோகன். நடிகர் மோகன், அமலா, ரேகா, கவுண்டமணி, செந்தில் என பலரும் நடித்த படம் அது. ஆனால், இளையராஜாவை அன்றைக்கு நெருங்கமுடியவில்லை. அவரிடம் கால்ஷீட் கேட்கப் போனால், பிரசாத் ஸ்டூடியோவில் நீண்ட க்யூ. “டைமே இல்லய்யா. அமர் மியூஸிக் பண்ணுவான். அடுத்த படம் நான் பண்ணித்தரேன்” என்று இளையராஜா சொல்லிவிட்டார். அதனால் கங்கை அமரன் இசையமைத்தார்.

‘இது ஒரு தொடர்கதை’ நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அடுத்த வாய்ப்பு இவரைத் தேடி வந்தது. “நீங்களே தயாரிங்க. நான் பைனான்ஸ் பண்றேன்” என்று திருச்செங்கோட்டில் உள்ள தியேட்டர் அதிபர் சொல்ல... அங்கே தயாரிப்பாளராகவும் வளர்ந்தார் அனுமோகன். பிரபுவையும் ராதிகாவையும் வைத்து ‘நினைவுச் சின்னம்’ எடுத்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இளையராஜா, தான் சொன்னபடி இசையமைத்துக் கொடுத்தார்.

இந்தக் கட்டத்தில், இருவர் வீட்டிலும் சம்மதம் கிடைக்காது என்பதால், இருவம் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டார்கள். சிவகுமார் தலைமையில், ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், பிரபு, ராதிகா முதலானவர்கள் ஆளுக்கொரு வேலையை எடுத்துக் கொண்டு செய்ய, இனிதே நடைபெற்றது திருமணம். மனைவியின் பெயர் அனுராதா. இவரின் பெயர் மோகன். அதனால் இவர் அனுமோகன் என்றானார்.

இதையடுத்து அடுத்தடுத்த படங்கள் இயக்கிக் கொண்டிருந்தார். காமெடியுடன் கதை சொல்வதில் வல்லவர் எனப் பேரெடுத்தார். முன்னதாக பல படங்களில் நடித்தாலும், கே.எஸ்.ரவிக்குமார் தன் படங்களில் அனுமோகனை நடிக்கவைத்தார். கே.எஸ்.ரவிக்குமார் படங்களில் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தில் வந்துவிடுவார்.

‘படையப்பா’ படத்தில், ரஜினியிடம், “ஏனுங்க... பாம்புப் புத்துக்குள்ளே கையை விட்டீங்களே... அதெப்படீங்க படையப்பரே...” என்று கொங்கு பாஷையில் இவர் சொல்ல, இதையே படம் முழுவதும் பேசிவிடுங்கள். ரஜினியைப் பார்க்கிற போதெல்லாம் இதையே திரும்பத் திரும்பக் கேளுங்கள் என்று கே.எஸ்.ரவிக்குமார் சொல்ல, அந்தக் காமெடியும் பாம்பும் ஹிட்டடித்தது. அனுமோகனும் கவனம் ஈர்த்தார்.

‘பாட்டாளி’ முதலான படங்கள், வடிவேலுவுடன் சேர்ந்து பண்ணிய காமெடிகள் என எல்லாமே அலப்பறையைக் கொடுத்து, அதிரிபுதிரி காமெடி சரவெடியாகின. விஐபி, மூவேந்தர், நட்புக்காக என்று வரிசையாக படங்கள் பண்ணினார் அனுமோகன். ஏராளமான படங்களுக்கு நடிகர்களுக்கு டப்பிங் கொடுக்கும் பணியையும் தொடர்ந்தார்.

’’இப்போ கேட்டாலும் எங்கிட்ட பத்துக் கதைகள் இருக்கு. ஒரு பக்கம் கதாசிரியராவும் எழுதிக்கிட்டே இருக்கேன். யார் கூப்பிட்டாலும் நடிச்சுக் கொடுத்துக்கிட்டே இருக்கேன். படம் டைரக்ட் பண்ற திட்டமும் இருக்கு’’ என்று பரபரசுறுசுறுவுடன் சொல்லும் அனுமோகன் இருக்குமிடத்தில் கலகலப்புக்கும் காமெடிக்கும் பஞ்சமே இருக்காது.

இயக்கத்தில் தனித்துவத்துடனும் காமெடியில் மகத்துவத்துடனும் திகழும் நடிகர் அனுமோகனின் பிறந்தநாள் இன்று.

பன்முகத்திறமை கொண்ட அனுமோகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

SCROLL FOR NEXT