சினிமா

மன்மத லீலை: குற்றங்கள் ‘லீலை’களாகக் கடக்கப்படும் அபாயம்!

கோபால்

இயக்குநர் வெங்கட் பிரபுவின் திரைப்படங்களில் குறைந்தபட்ச கலகலப்புக்கு உத்தரவாதம் உண்டு. அதுவும் அவர் ‘அடல்ட் காமெடி’ திரைப்படம் இயக்கியிருக்கிறார் என்று தெரிந்ததால் ‘மன்மத லீலை’ திரைப்படத்துக்கு ரசிகர்கள், குறிப்பாக இளைஞர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு. அவருடைய முந்தைய படமான ‘மாநாடு’ வசூல்ரீதியாக பிரம்மாண்ட வெற்றியடைந்து விமர்சகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்ட சில மாத இடைவெளியில் வெளியாகியிருப்பதாலும் ‘மன்மத லீலை’ படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.

இந்த இரண்டு வகையிலான எதிர்பார்ப்புகளில் கலகலப்பு சார்ந்த எதிர்பார்ப்பை ஓரளவு நிறைவேற்றிவிட்டார் வெங்கட் பிரபு. ஆனால் ‘மாநாடு’ படத்தில், தம்முடைய சுயநலத்துக்காக இஸ்லாமிய இளைஞர்களைத் தீவிரவாதிகளாக முத்திரை குத்தி அவர்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் அரசியல்வாதிகளைச் சாடியிருந்தார். அந்தப் படத்தில் வெளிப்பட்ட அவருடைய போற்றத்தக்க சமூகப் பொறுப்புணர்வு அவரது அடுத்த படத்திலேயே தலைகீழாகத் திரும்பிவிட்டது வருத்தமளிக்கிறது. ஆம், சமூகச் சீரழிவுக்கு வித்திடும் படைப்பாக வெளியாகியிருக்கிறது இப்படம்.

மணிவண்ணன் பாலசுப்ரமணியம் என்பவரின் கதையை வாங்கி திரைக்கதை அமைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. சமூகத்துக்கு மோசமான முன்னுதாரணத்தை முன்வக்கும் இப்படிப்பட்ட கதையை, ஏன் வெங்கட் பிரபு வெளியிலிருந்து வாங்கி படமெடுத்தார் என்று புரியவில்லை.

பெண்களுக்கான உயர்ரக நவீன ஆடைகளை வடிவமைப்பவனான நாயகன் சத்யா (அசோக் செல்வன்) தன் திறமையால் பெரிய பொடீக் (Boutique) தொழிலதிபர் ஆகிறான். அவனுடைய வாழ்வின் இருவேறு காலகட்டங்களில் நிகழும் பெண்களுடனான உறவு சார்ந்த அனுபவங்களை அடுத்தடுத்து காண்பிக்கும் விதமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. 2010-ல் திருமணமாகாத விடலையாக இணைய அரட்டையில் பெண்களுக்கு வலைவீசி அவர்களில் ஒரு பெண் (சம்யுக்தா ஹெக்டே) தனியாக இருக்கும்போது அவளுடைய வீட்டுக்குச் சென்று ஓர் இரவுப் பொழுதைக் கழிக்கிறான். 2020-ல் மனைவியையும் (ஸ்ம்ருதி வெங்கட்) மகளையும் உறவினர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு விட்டில் தனிமையில் இருக்கையில் அங்கு வழிதவறி வரும் பெண்ணுடன் (ரியா சுமன்) ஓர் இரவைக் கழிக்கிறான். இரண்டு சூழல்களிலும் சத்யாவுக்கும் அவனுடன் தங்கிய பெண்களுக்கும் நிகழ்வது என்ன என்பதுதான் படத்தின் கதை.

ஆணும் பெண்ணும் சேர்ந்து மது அருந்துவது, பாலியல் குறித்த மறைமுக உரையாடல்கள், பெண்களின் ஆடைகள் மறைக்காத உடல் பாகங்களை வட்டமிடும் கேமரா, அது கொடுக்கும் கிளர்ச்சியை ஊக்குவிக்கும் பின்னணி இசை என ‘அடல்ட் காமெடி’ வகைமை அளிக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் வெங்கட் பிரபு. அதே நேரம் நகைச்சுவை என்ற அளவில் ஆங்காங்கே ஓரளவு சிரிக்க வைத்தாலும் அவரது முந்தைய படங்களில் இருந்த நகைச்சுவை அறுசுவை விருந்தென்றால் இது மாலை நேர கொறிப்புக்கான வடை-காபியாக சுருங்கிவிடுகிறது. ஆனால் படத்தின் பெரும்பகுதி ஒரே அறைக்குள் இரண்டு கதாபாத்திரங்களின் உரையாடல் வழியாகவே நகர்ந்தாலும் படம் பெருமளவில் அலுப்போ சலிப்போ ஏற்படுத்தாமல் நகர்கிறது. இந்த விஷயத்தில் வெங்கட் பிரபுவின் திரைக்கதை திறமை கைகொடுத்திருக்கிறது. இரண்டு காலகட்டங்களையும் மாற்றி மாற்றி காண்பித்தாலும் ரசிகர்களுக்கு குழப்பமோ அசதியோ ஏற்படாத வகையில் படத்தை நகர்த்திச் செல்வதில் வெங்கட் ராஜனின் படத்தொகுப்பு வெங்கட் பிரபுவுக்குத் தக்க துணைபுரிந்திருக்கிறது.

இரண்டாம் பாதியில் அவிழும் ட்விஸ்ட் சற்று ஆச்சரியப்படுத்தினாலும அதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகள் மூலம் படம் கிரைம் த்ரில்லர் வகைமையாக மாற முயல்கிறது. ஆனால் அந்தக் காட்சிகளில் கிரைம் இருக்கிறதே தவிர த்ரில் இல்லை. படத்தின் இறுதிக் காட்சிகள் காதில் பூசுற்றல் ரகம். நாயகன் நினைத்ததெல்லாம் நடக்கின்றன. அவனை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுகிறவர்கள்கூட அவனை அப்படியே நம்பும் அப்பாவிகளாக இருக்கிறார்கள். அதுவரை பாலியல் அத்துமீறல்களைத் தாண்டி வேறெந்த பிழையும் செய்யாத அப்பாவியாகக் காண்பிக்கப்பட்ட நாயகன் திடீரென்று தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகக் கொலை உட்பட எத்தகைய படுபாதகத்தையும் செய்யத் தயங்காத கயவனாக உருமாற்றம் அடைவதே பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி அல்லது அதிர்ச்சிக்குள்ளாக்கி படத்தை ரசிக்க வைத்துவிடும் என்று வெங்கட் பிரபு எதிர்பார்த்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இந்த விஷயம் அரங்கேற்றப்பட்ட விதத்தில் இருக்கும் தர்க்கப் பிழைகள் துருத்தித் தெரிவாதாலும் இது திரைக்கதையாசிரியரின் வசதிக்கேற்ப அரங்கேற்றப்படும் திருப்பம் என்பதாலும் இந்த மாற்றம் ஏமாற்றமாகவே மிஞ்சுகிறது.

இதுபோன்ற குறைகளைக்கூட மன்னித்துவிடலாம். ஆனால் கொடும் குற்றங்களை இழைக்கும் நாயகன் அவற்றிலிருந்து தப்பித்து சமூகத்தில் மதிப்புக்குரிய கனவானாக வாழ்வது போன்ற சித்தரிப்பை நியாயப்படுத்தவே முடியாது. குற்றவாளிகள் பலர் சமூகத்தில் நல்லவர்களாக மதிப்புக்குரியவர்களாக வாழ்ந்துகொண்டிருப்பது உண்மைதான். அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி படம் எடுப்பதும் தவறில்லை. ஆனால் அதை எதற்காக எடுக்கிறோம் என்பதில்தான் ஒரு படைப்பாளியின் சமூகப் பொறுப்பு அல்லது பொறுப்பின்மை வெளிப்படுகிறது.

சட்டத்தின் முன் அகப்படாமல் கனவான்களாகவே நீடிக்கும் குற்றவாளிகளின் கதைகளை ஒரு சமூக அவலமாகத் துயரத்துடன் பதிவுசெய்யலாம் அல்லது அது ஒரு சமூக எதார்த்தம் என்கிற அளவில் பதிவுசெய்யலாம். ஆனால் குற்றவாளிகள் எல்லா தந்திரங்களையும் செய்து தப்பிப்பதை ஒரு நாயக சாகசம்போல் காண்பிப்பது குற்றங்களையும் குற்றவாளிகளையும் கொண்டாடுவதாகிறது.

இது சமூகத்துக்கு அதுவும் வெகுஜன சினிமாவை மனதுக்கு மிக நெருக்கமான வாழ்வியல் அம்சமாகவும் வெகுஜன நாயகர்களைத் தலைவர்களாகவும் போற்றும் ரசிகர்கள் நிரம்பியிருக்கும் சூழலில் இதுபோன்ற சித்தரிப்புகள் மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். வெங்கட் பிரபுவின் மிகப் பெரிய வெற்றிப் படமான ‘மங்காத்தா’வுக்கும் இந்த விமர்சனம் பொருந்தும். அந்தப் படம் வெளியாகி பத்தாண்டுகளுக்குப் பிறகும் அவர் அதேபோன்ற ஒரு குற்றவாளியை நாயகனை முன்னிறுத்துவது வருத்தம் அளிக்கிறது. அதே நேரம் ‘மங்காத்தா’ படம் கேளிக்கை என்னும் அளவில் வழங்கிய திருப்தியை இந்தப் படம் வழங்கத் தவறுகிறது. மேலும் இந்தப் படத்தின் நாயகன் தன் சுயநலத்துக்காக ஒரு பெண்ணைக் கொலை செய்துவிட்டு தப்பிக்கிறான். பெண்களுக்கெதிரான கொடுங்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில் இதுபோன்ற சித்தரிப்புகள் சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை விளைவிக்கும் என்று வெங்கட் பிரபு போன்ற திரைப்பட இயக்குநர்கள் சற்றேனும் சிந்திக்க வேண்டும்.

மொத்தத்தில் ‘மன்மத லீலை’ படத்தின் நாயகன் சத்யா மன்மதனோ இல்லையோ அவனுடைய செயல்கள் லீலைகள் என்று சாதாரணமாகக் கடக்கத்தக்கவை அல்ல. அவை தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்கள்!

SCROLL FOR NEXT