அஜித் படத்தில், 21 வருடத்துக்குப் பிறகு பிரபல நடிகர் இணைந்துள்ளார்.
’வலிமை’ படத்தை அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் அஜித்குமார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. AK 61 என்று தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்காக, அங்கு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்தப் படத்தின் அஜித் கெட்டப் புகைப்படத்தைத் தயாரிப்பாளார் போனி கபூர் வெளியிட்டிருந்தார். அதில் வெள்ளை தாடியுடனும் காதில் கடுக்கனுடனும் ஸ்டைலாக இருந்தார் அஜித். இந்நிலையில், உடலை கணிசமாகக் குறைத்து ஸ்லிம்மான அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப் படங்கள் சமூக வலைதளங்களில் பரவின.
இந்தப் படத்தில் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் நடித்த ஜான் கொக்கென், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். அஜித் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், அஜித்துடன் ’தீனா’ படத்தில் நடித்த மகாநதி சங்கர் 21 வருடத்துக்கு பிறகு அவர் படத்தில் இணைந்துள்ளார்.
’தீனா’ படத்தில் இவர்தான் அஜித்குமாரை ’தல’ என்று அழைப்பார். அந்த ’தல’ தான் அஜித்தின் பிரபலமான பெயரானது குறிப்பிடத்தக்கது.